Tuesday, April 15, 2014

தண்ணீர்..தண்ணீர்... - 5

தண்ணீர்..தண்ணீர்...
முளைக்கட்டும், தண்ணீர் மன்றங்கள்!
ஆர். குமரேசன் படங்கள்: வீ. சக்தி அருணகிரி, ஆர்.எம்.முத்துராஜ்
 நீர் மேலாண்மை
'பாக்கெட்டில் பாலும்
பாட்டிலில் வாட்டரும்
ஃபாஸ்ட் ஃபுட்டும் சாப்பிட்டு
கான்கிரீட் சிறைகளில் வாழும்
கார்டு ஹோல்டர்கள்
ரிங் டோனில் கேட்கிறார்கள்,
நதியின் கீதம்’
-இன்றைய எதார்த்தத்தின் மீது எச்சில் துப்புகிறது, கவிஞர் இளங்குமரனின் இந்தக் கவிதை.
உண்மைதான். ஒரு காலத்தில் கிராமங்களில் சிறுசுகளில் இருந்து பெருசுகள் வரை நீச்சல் தெரியாதவர்கள் இருந்ததில்லை. காரணம், ஆறு, ஏரி, கண்மாய், குளம், குட்டை, கிணறுகள்... என நீர் நிலைகளைச் சுற்றியே குடியிருப்புகள் இருந்தன. இன்றோ... 'விரிவாக்கம்' என்கிற பெயரில் நீர் நிலைகளெல்லாம் காணாமல் போய் விட்டன. நகரத்துவாசிகள் செயற்கைக் குளங்களில் மல்லாந்து கிடக்கிறார்கள். கிராமத்துச் சிறுவர்களுக்குத்தான் நீச்சல் பழக நீர் நிலைகள் இல்லாமல் போய் விட்டன. பத்து, இருபது ஆண்டுகளுக்குள்தான் இந்த தலைகீழ் மாற்றங்கள் உருவாகியுள்ளன.
'ஆறுகளில் குளித்த ஆனந்தக் குளியல், கிணறுகளில் மீன்களாய் துள்ளிக் குதித்து மகிழ்ந்த நாட்கள்... போன்றவை நாற்பது வயதைக் கடந்தவர்கள் நினைவுகளில் இன்றைக்கும் நிழலாடும். எங்கே போயிற்று அந்த ஆனந்தம்? நாம் அனுபவித்த அந்த ஆனந்த அனுபவத்தை நமது சந்ததிகள் அனுபவிக்க வேண்டாமா? ஓடும் நீரில், உடலை மிதக்கவிட்டு, மனச்சோர்வை மறக் கடிக்கும் மகிழ்ச்சியை அவர்களும் பெற வேண்டாமா?'
பலரின் இந்த ஆதங்கத்தில் உண்மையிருக்க லாம். ஆனால், ஆதங்கம் மட்டுமே அனைத்துக்குமான தீர்வாகி விடுவதில்லையே? நீர் நிலைகளில் நீர் இல்லை எனப் புலம்பு வதால் ஆகப்போவது ஒன்றுமில்லை. மாறாக, அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்க வேண்டும். முதற்கட்டமாக, தூர்ந்து போன கிணறுகள், குளங்கள், குட்டைகள், வாய்க்கால்களைத் தூர்வார வேண்டும். அதற்கு இதுதான் சரியான நேரம்.
சுற்றுலா தலங்களுக்குச் சென்றுதான் கோடை விடுமுறையைக் கழிக்க வேண்டும் என்பதில்லை. எத்தனையோ விடுமுறைகளை பயணங்களில் போக்கிவிட்டோம். இந்த ஒரு விடுமுறையையாவது பயனுள்ளதாக ஆக்கலாமே..! அதற்கு பணம் தேவையில்லை. மனம் இருந்தால்போதும்!
நேற்று குப்பைத் தொட்டி... இன்று குடிநீர்க் கிணறு!
'இது சாத்தியமா?’ எனக் கேட்பவர்களுக்கு, தங்கள் செயல் மூலமாக பதில் சொல்கிறார்கள், விருதுநகர் மாவட்டம், ரோசல்பட்டி பஞ்சாயத்து, குமாரபுரம் பொதுமக்கள். 60 வயதான குடிநீர்க் கிணறு ஒன்று இக்கிராமத்தில் இருக்கிறது. ரோசல்பட்டி, குமாரபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்திரா காலனி, ரங்கநாதபுரம், திடீர் நகர் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் தாகத்தைத் தீர்த்த அந்தக்கிணறு... ஆழ்துளைக் கிணறுகள், மேல்நிலைத் தொட்டிகள் ஆகியவற்றின் வருகைக்குப் பிறகு சீந்துவாரில்லாமல் போனது. இறைக்க, இறைக்க ஊறும் நீர், இறைக்காததால் கிடைநீராக மாறியது. பயன்பாடு அற்றுப்போய், சிறிது காலத்தில் ஊற்று அடைபட்டு வறண்டு, ஊர் குப்பைக் கூளங்களைச் சுமக்கும் 'மெகா சைஸ்’ குப்பைத் தொட்டியாக மாறிப்போனது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக, குப்பைத் தொட்டியாக இருந்த அக்கிணற்றில் மீண்டும் தண்ணீரைக் கொண்டு வந்துள்ளனர், அந்தக் கிராமத்து மக்கள்.
ஊர் கூடி தேர் இழுத்தால் எளிதாக வந்து சேரும்!
''கிணத்தைத் து£ர் வாரச் சொல்லி அதிகாரிகங்ககிட்ட பல வருஷமா கேட்டும், மனு கொடுத்தும் எந்தப் பிரயோசனமும் இல்ல. இப்ப குடிதண்ணிக்கு கடுமையான தட்டுப்பாடு ஆகிப்போச்சு. 'இனி யாரையும் நம்பி பிரயோசனம் இல்லை’னு முடிவு செஞ்சு, ஊர் மக்களே களத்துல குதிச்சுட்டோம். குப்பைகள், பிளாஸ்டிக் பைகள், மது பாட்டில்கள்னு பத்து அடிக்கு கிணத்துல குவிச்சு கிடந்துச்சு. எல்லாத்தையும் வெளிய எடுத்த ரெண்டாவது நாளே லேசா தண்ணி ஊற ஆரம்பிச்சுது. அதைப்பாக்க ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அடுத்து நல்லா தூர் வாருனதுல, தண்ணி அதிகமா ஊற ஆரம்பிச்சுடுச்சு. மொத்தமே நாலு நாள் வேலைதான். ரொம்ப நாளா குப்பைகள் இருந்ததால முதல்ல ஊறுன தண்ணி சாக்கடை தண்ணி மாதிரி கலங்கலா இருந்துச்சு. அதையெல்லாம் மோட்டார் வெச்சு வெளியேத்திட்டோம். இப்போ நல்ல சுத்தமான தண்ணியா இருக்குது.
ஊரு வாலிப பசங்க, பள்ளிக்கூடத்து பசங்க, பெண்கள் எல்லாம் சேந்துதான் தூர் வாருனோம். உடல் உழைப்பைக் கொடுக்க முடியாத ஊர்க்காரங்க கொஞ்சப்பேர், டீ, சாப்பாடுனு வாங்கிக் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க. இனி, இந்தக் கிணத்துத் தண்ணியைத்தான் நாங்க குடிநீரா பயன்படுத்தப் போறோம். அதில்லாம, இனி எங்க ஊருக்கான எல்லா தேவைகளையும் முடிஞ்சளவுக்கு நாங்களே செஞ்சுக்கணுங்கிற முடிவுக்கும் வந்திட்டோம்''
-இப்படி தன்னம்பிக்கை பொங்க என்னிடம் சொன்னார் ரோசல்பட்டி பஞ்சாயத்து கவுன்சிலர் அன்னபூரணி.  
நன்றிக்கடன் செலுத்துங்கள்..!
இப்படி உங்கள் ஊரிலும் நிச்சயம் ஒரு கிணறோ, சிறிய குளமோ அல்லது குட்டையோ இருக்கும். அதை தூர் வாருங்கள். நீர் ஊறா விட்டாலும் பரவாயில்லை. வரும் மழைக் காலத்தில் அது மிகச் சிறந்த மழை நீர்ச் சேமிப்புக் கலனாக மாறும். அதன் மூலமாக, அக்கம்பக்கமுள்ள ஆழ்துளைக் கிணறுகள், விவசாயக் கிணறுகளின் நீர் மட்டமும் உயரும். அதல பாதாளத்துக்குச் சென்று விட்ட நிலத்தடி நீரை மேலே கொண்டு வர பலத்த கூட்டு முயற்சியும், கடின உழைப்பும் அவசியம் தேவை. கிராமங்கள் இழந்தவற்றை, நாம் தொலைத்தவற்றை, மீட்கும் முயற்சியில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம்.
நம்வீட்டு மேல்நிலைத் தொட்டியில் ஏதாவது பிரச்னை என்றால்... அப்படியே விட்டுவிடுவோமா என்ன? அதை சரி செய்யும் வேலையில் உடனடியாக இறங்குவோம்தானே! 'தனக்கு’ எனும்போது, சுறுசுறுப்பாக களத்தில் இறங்கும் நாம், 'பொதுவானது’ எனும் போது மட்டும் அக்கறை செலுத்தத் தயங்குவது எந்தவகையில் நியாயம்?
நீராதாரங்களைக் காக்க மன்றங்கள்!
அரசியல்வாதிகளுக்கும், அவர்தம் வாரிசுகளுக்கும், சினிமா கதாநாயகர்களுக்கும் ரசிகர் மன்றம் வைத்து, நேரத்தையும், பணத்தையும் வீணாக்குவதைவிட... நமது வாழ்வாதாரங்களான நீராதாரங்களைக் காக்க, ஏன் மன்றங்களைத் தொடங்கக் கூடாது? இது ஒன்றும் நமக்கு புதியதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு வரை வழக்கத்தில் இருந்த 'குடி மராமத்து’ முறையைத்தான் மீண்டும் கையில் எடுக்கப் போகிறோம். அந்தக் காலத்தில், ஊர் மக்கள் ஒன்று கூடி, தங்கள் கிராமங்களைச் சுற்றியுள்ள நீராதாரங் களைச் சீரமைத்துக் கொள்வார்கள். அதேபோல, நமது வாழ்வாதாரத்தைக் காத்துக் கொள்வதற்காக மீண்டும் பராமரிப்புப் பணிகளை, போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.
மழையில்லாமல் விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில், குடிநீர்த் தேவை மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக, சென்னையில் குடிநீர்த் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது.. ஆட்சியாளர்கள் நினைத்திருந்தால், இதை எப்போதோ சரி செய்திருக்க முடியும். ஆனால், விவசாயத் தேவைக்கென்றே உரு வாக்கப்பட்ட ஏரிகளையெல்லாம் வளைத்து... வளைத்து குடிநீர்த் திட்டங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சென்னையைச் சுற்றியிருக்கும் ஏரிகளை வளைத்தது போதாதென... நூறு மைல்களுக்கு அப்பால் இருக்கும் வீராணம் ஏரியையும் வளைத்துவிட்டனர்.
''தொலைநோக்குத் திட்டங்கள் இல்லாத தலைமைகளால்.. தண்ணீர் பஞ்சத்தில் தவித்து வருகிறது, தமிழகம். குறிப்பாக, சென்னையின் குடிநீர்த் தட்டுப்பாட்டை தடுக்கும் சிறப்பான திட்டங்கள் கைவசம் இருந்தும், அவையெல்லாம் நடைமுறைப் படுத்தப்படவே இல்லை. அத்திட்டங்களை உடனடியாக செயல்படுத்தினால், சென்னை நகரம் எதிர்நோக்கி இருக்கும் தண்ணீர் தட்டுப்பாடு எனும் பேராபத்து தடுக்கப்படும்'' என்கிறார், பொதுப்பணித்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற செயற்பொறியாளர் எம். குணசேகரன்.
அது என்ன திட்டம்? அடுத்த இதழில்...

- பொங்கிப் பாயும்...

- Vikatan

வயல்வெளிப் பள்ளி - கேள்விகளும்...பதில்களும் ! - 5

 ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனைக் கேள்விகளுக்கும் விடையாக மலரும் இந்தப் பகுதியில் நெல் நடவு முறைகளைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக் கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின், 'வளம் குன்றா அங்கக வேளாண்மைத்துறை’ தலைவர் மற்றும் பேராசிரியர் ராமசாமி.
''நெல் நடவு செய்வதில் எத்தனை விதமான முறைகள் உள்ளன?''
''சாதாரண நடவு முறை, ஒற்றை நாற்று முறை (திருந்திய நெல் சாகுபடி முறை), இயந்திர நடவு முறை என மூன்று முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
சாதாரண முறை!
குறுகிய மற்றும் மத்திய கால ரகங்களை 20 நாட்கள் முதல் 24 நாட்களுக்குள் நடவு செய்யும்போதுதான் மகசூல் சிறப்பாக இருக்கும். நீண்ட கால ரகங்களை 30 முதல் 35 நாட்களுக்குள் நடவு செய்தால், மகசூல் சிறப்பாக இருக்கும். பொதுவாக, நாற்றுகளை வரிசைக்கு வரிசை 25 சென்டி மீட்டர், பயிருக்குப் பயிர் 15 சென்டி மீட்டர் என இடைவெளி கொடுத்து நடவு செய்தால், விளைச்சல் நன்றாக இருக்கும். சம்பா பட்டத் தில், வரிசைக்கு வரிசை 25 சென்டிமீட்டர், பயிருக்குப் பயிர் 20 சென்டிமீட்டர் என இடைவெளி கொடுக்க வேண்டும்.
நடவு செய்யும்போது, வயலின் ஒரு பகுதியில் வாய்க்காலில் 100 லிட்டர் அளவுக்கு தண்ணீர் நிறுத்தி, அதில் ஒரு லிட்டர் பஞ்சகவ்யா கரைசலைக் கலந்து கொள்ள வேண்டும். அக்கரைசலில் நாற்றின் வேர்பகுதிகளை நனைத்து நடவு செய்ய வேண்டும். வழக்கமான முறையில் நடவு செய்யும்போது, குத்துக்கு இரண்டு மூன்று நாற்றுகளாக வைக்க வேண்டும். 5 அடி அகலத்துக்கு நடவு, ஓரடி இடைவெளி... என நடவு செய்ய வேண்டும். இவ்வாறு இடைவெளி விடுவதற்கு 'பட்டக் கயிறு’ பயன்படுத்தலாம். களையெடுக்க, உரமிட என வயலுக்குள் சென்று வருவதற்கு, இந்த இடைவெளி பயன்படும்.
ஒற்றை நாற்று முறை!
12 முதல் 14 நாட்கள் வயதான நாற்றுகளை இந்த வகை முறையில் நடவு செய்யலாம். நடவுக்குத் தயார் செய்த நிலத்தில் 'மார்க்கர்’ கருவியால்... 25 சென்டி மீட்டருக்கு, 25 சென்டி மீட்டர் என்ற இடைவெளியில் குறி செய்து, ஒரு குத்துக்கு ஒரு நாற்று வீதம் நடவு செய்ய வேண்டும். மார்க்கர் இல்லாவிட்டால், நீளமான கயிற்றில் 25 சென்டி மீட்டர் இடைவெளியில் 'ஒயரிங் டேப்’ ஒட்டி தயார் செய்து, அக்கயிற்றை இருபுறமும் பிடித்துக் கொண்டு டேப் ஒட்டப்பட்ட இடத்துக்கு நேராக நடவு செய்யலாம். 10 லிட்டர் தண்ணீரில் 100 மில்லி பஞ்சகவ்யா கலந்த கரைசலில் நாற்றின் வேர் பகுதியை நனைத்து நடவு செய்ய வேண்டும்.
இந்த வகை நடவு முறையில், கோனோ வீடர் மூலம் களைகளை அழுத்தி விடுவது எளிதாக இருக்கும். ஆனால், ஒற்றை நாற்று முறையை அனைத்துப் பட்டங்களிலும் கடைபிடிக்க முடியாது. வடகிழக்குப் பருவ மழைக் காலங்களில் (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை), தண்ணீர் தேங்கும் பகுதிகளில் ஒற்றை நாற்று சாகுபடி சரிப்பட்டு வராது. தவிர, மத்திய மற்றும் நீண்டகால நெல் ரகங்கள் மட்டும்தான் ஒற்றை நாற்று முறைக்கு ஏற்றவை. குறுகியகால ரகங்கள் ஏற்றதல்ல. குறுகியகால  ரகங்கள், சாதாரண நடவு முறையிலும், நேரடி விதைப்பு முறையிலும் மட்டும்தான் நல்ல மகசூல் கொடுக்கின்றன.
இயந்திர நடவு!
இம்முறையில் நிலத்தை சேறாக்கும்போது தண்ணீர் அதிகமாக இருக்கக்கூடாது. அதாவது, வயலில் ஒரு கல்லை தூக்கிப் போட்டால் சேறு தெறிக்கக்கூடாது. அந்தளவுக்குதான் தண்ணீர் இருக்க வேண்டும். நாற்றுகளை இயந்திரத்தில் வைத்து இயக்கினால், நாற்றுகள் நடப்பட்டு விடும். வழக்கமான பராமரிப்பு முறைகளை பின்பற்றினால் போதுமானது''
''நெல் வயலில் தண்ணீர் மேலாண்மை பற்றிச் சொல்ல முடியுமா?''
''தண்ணீர் மேலாண்மை சரியாக இருந்தால், களைகள் கட்டுப்படுவதோடு, நல்ல மகசூலும் கிடைக்கும். நடவு செய்த ஒரு வாரத்துக்கு மண் மறையும் அளவுக்கு (ஓர் அங்குல உயரத்துக்கு) சீராக தண்ணீர் நிறுத்த வேண்டும். அதற்குமேல், பயிர் கதிர் வீசத் துவங்கும் வரை 'காய்ச்சலும் பாய்ச்சலுமாக’ தண்ணீர் கட்ட வேண்டும். அதாவது, வயலில், லேசான விரிசல் உருவான பிறகு, இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் நிறுத்தினால் போதுமானது. கதிர் வீச துவங்கியது முதல், 'நீர் மறைய, நீர் பாய்ச்சுதல்’ முறையில்... இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் கட்ட வேண்டும். மணற்பாங்கான இடங்களில் இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், களிமண் பாங்கான இடங்களில் 5 முதல் 7 நாட்களுக்கு ஒரு முறையும் பாசனம் செய்தால் போதுமானது. 40 நாட்கள் வரை மண்ணின் ஈரம் குறைந்து நிலம் இறுகி விடாத அளவுக்கு பாசனம் செய்துவர வேண்டும். அப்போதுதான் களைகள் குறையும். தவிர, கோனோ வீடரை உருட்டும்போது கஷ்டமில்லா மலும் இருக்கும்''
''களைகளை எப்படிக் கட்டுப்படுத்துவது?''
''நடவு செய்த 7-ம் நாளில் பயிர் வேர் பிடித்து பச்சை கொடுக்க ஆரம்பித்துவிடும்.
15 நாட்கள் முதல் 20 நாட்களுக்குள் ஒரு முறை களைகளை கோனோ வீடர் மூலம் அழுத்தி விட வேண்டும். அதேபோல, 30 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் ஒரு முறை களைகளை அழுத்திவிட வேண்டும். கோனோ வீடர் பயன்படுத்தும்போது, வேர்களுக்குத் தேவையான காற்றோட்டம் கிடைக்கும். கருவி மூலம் அழுத்திவிட்ட பிறகும் மீதம் உள்ள களைகளை கையால் அகற்றி, சேற்றில் போட்டு மிதித்துவிட வேண்டும். 35 நாட்களுக்கு மேல், பயிர்கள் வளர்ந்து மூடிக் கொள்வதால், களைகள் வராது.
நெல் வயல்களில் அசோலாவைப் பயன்படுத் தினால், களைகள் கட்டுப்படும். கால்நடை களுக்கு தீவனமாகவும் அசோலாவைப் பயன் படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்துக்கு 5 கிலோ அசோலா போதுமானது. நடவு செய்த 7-ம் நாளில் தண்ணீர் கட்டி, அசோலாவை வயலில் நான்கு பக்கத்தில் இருந்தும் நிலத்தின் உள்பகுதியில் தூவ வேண்டும். அளவான தண்ணீரும், வளர்ச்சிக்குத் தேவையான சத்துகளும் நிலத்தில் இருப்பதால், 15 நாட்கள் முதல் 25 நாட்களில் நிலம் முழுவதும் அசோலா பெருகி, வயலை மூடிவிடும். 30-ம் நாளுக்கு மேல், தினமும் 50 கிலோ முதல் 100 கிலோ வரை அசோலாவை அறுவடை செய்து கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம். கோனோ வீடர் மூலம் களை எடுக்கும்போது, நிலம் முழுவதும் படர்ந்து கிடக்கும் அசோலாவை அப்படியே அழுத்திவிட்டால், பயிர்களுக்கு தழைச்சத்துகள் கிடைத்துவிடும். அசோலா வயல் முழுவதும் பரவும்போது, தண்ணீர் ஆவியாவது குறையும். அசோலாவானது, காற்றில் இருக்கும் நைட்ரஜனை (தழைச்சத்து) கிரகித்து மண்ணுக்கு கொடுப்பதால், உரத் தேவையும் 30 சதவிகிதம் குறையும். நெல் தூர்கள், அதிகமான சிம்புகள் விட்டு வளரும்.''
''கோடை காலங்களில் நெல் சாகுபடி செய்யும் முறைகளைச் சொல்ல முடியுமா?''
''குறுவை, சம்பா என இரண்டு பருவங்களில் நெல் சாகுபடி செய்த வயல்களில், கோடை காலத்தில் நெல் சாகுபடி செய்யக்கூடாது. இடையில் வேறு ஏதாவது பயிர் செய்துவிட்டு, தண்ணீர் வசதி இருந்தால் கோடை காலங்களில் நெல் சாகுபடி செய்யலாம். இந்தப் பட்டத்தில் சாகுபடி செய்யும்போது பூச்சி, நோய் தாக்குதல்கள் குறைவாக இருக்கும். நெல்மணிகள் நல்ல நிறத்தில் தரமானதாக இருக்கும். அவற்றை விதை பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளலாம். இந்தப் பட்டத்தில் 130 நாட்களுக்குக் குறைவான நெல் ரகங்களைப் பயன்படுத்தலாம். இந்த ரகங்களின் வயது, வழக்கமான வயதைவிட,
5 நாட்கள் முதல் 10 நாட்கள் வரை குறைவாகவே இருக்கும். கோடை காலத்தில் பயிர்களில் இருந்து தூர்கள் கிளைத்து வருவது குறைவாகத்தான் இருக்கும். அதனால், குளிர்காலத்தில் நடவு செய்ததைவிட 5 முதல் 10 சதவிகிதம் வரை நெருக்கமாக நடவு செய்ய வேண்டும். முறையான உர மேலாண்மையை மேற்கொள்ள வேண்டும். ஆவியாதல் அதிகமாக இருப்பதால், வழக்கமாகக் கட்டும் தண்ணீரின் அளவைவிட சற்று அதிகமாக தண்ணீர் நிறுத்த வேண்டும். களைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ஆவியாவதைக் குறைப்பதற்கும் அசோலாவை வயலில் வளர்க்கலாம்.''
''கோடை காலத்தில் தண்ணீர்ப் பற்றாக்குறையின் போது, வாடும் பயிர்களை எப்படிக் காப்பாற்றுவது?''
''தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நுண்ணுயிரியல் துறை, 'பி.பி.எஃப்.எம்.’ (PPFM-Pink Pigmented Facultative Methylotroph)என்று அழைக்கப்படும் 'மெத்தைலோ பாக்டீரியா’வை (Methylo Bacteria) கண்டுபிடித்துள்ளது. இவற்றைப் பயன்படுத்தி... ஒரு வார காலத்துக்கு தண்ணீர் பற்றாகுறையால் வாடும் பயிர்களைக் காப்பாற்ற முடியும்.
இந்த பாக்டீரியாவைத் தெளித்தால், இலைகளில் உள்ள பச்சையம் தக்க வைக்கப்படுகிறது. பச்சையம் நீடித்தாலே, ஒளிச்சேர்க்கை முறையாக நடந்து, பயிர்கள் இயல்பாக உயிர் வாழும்.
ஒரு ஏக்கர் நிலத்துக்கு 200 லிட்டர் தண்ணீரில் 200 மில்லி பாக்டீரியாவைக் கலந்து தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் திரவ வடிவிலான பாக்டீரியாவின் விலை,
300 ரூபாய். இது, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் நுண்ணுயிரியல் துறையில் கிடைக்கும். அருகில் உள்ள வேளாண் அறிவியல் மையங்களையோ, வேளாண் ஆராய்ச்சி நிலையங்களையோ அணுகினாலும், வாங்கிக் கொடுப்பார்கள்.
தொடர்புக்கு,
நுண்ணுயிரியல் துறை, தமிழ்நாடு
வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்.
தொலைபேசி: 0422-6611394
- படிப்போம்...
- Vikatan

வயல்வெளிப் பள்ளி - கேள்விகளும்...பதில்களும் ! - 4

 ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடையாக மலரும் இந்தப் பகுதியில் நெல் பயிரைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெல் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ராபின்.
''புழுதி விதைப்பு முறை பற்றி கொஞ்சம் விளக்குங்கள்... எந்தெந்த மாவட்டங்களில் இந்த முறையில் விதைக்கிறார்கள்...''
''காஞ்சிபுரம், திருவள்ளூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக புழுதி விதைப்பு செய்யப்படுகிறது. புழுதி விதைப் புக்கு... 120 நாள் வயதுடைய ரகங்களான எம்.டி.யூ-5, அண்ணா.ஆர்-4, பி.எம்.கே-3, டி.கே.எம்-11 மற்றும் டி.கே.எம்-12 ஆகிய ரகங்கள் ஏற்றவை.
சித்திரை மாதத்தில் கிடைக்கும் மழையில்... கோடை உழவு செய்து கொள்ள வேண்டும். தென்மேற்குப் பருவமழை அல்லது வட கிழக்குப் பருவமழை தொடங்கும் நேரத்தில், 5 டன் அளவுக்குத் தொழுவுரத்தைக் கொட்டி கலைத்து... நன்றாகப் புழுதி உழவு செய்து கொள்ள வேண்டும். கடைசி உழவின்போது ஏக்கருக்கு 400 கிலோ ஜிப்சம் (இது இயற்கை உரம்தான்) இட்டு மண்ணைப் பொலபொலப்பாக்கி, மட்டப்பலகை வைத்து மாடுகள் மூலமாகவோ... அல்லது 'லெவலர்’ மூலமோ நிலத்தைச் சமப்படுத்தி, அதிகப்படியான தண்ணீர் தேங்காமல் வடிவதற்கு வசதியாக வடிகால் அமைக்க வேண்டும்.
ஒரு ஏக்கர் நிலத்தில் புழுதி விதைப்பு செய்ய, 30 கிலோ விதைநெல் தேவைப்படும். வறட்சியைத் தாங்கி வளரும் வகையில் விதையைக் கடினப்படுத்தி விதைக்க வேண்டும். ஒரு கிலோ விதைக்கு, 100 கிராம் அடுப்பு சாம்பல், 50 கிராம் வேப்பங்கொட்டைத்தூள், 100 மில்லி ஆறிய அரிசிக்கஞ்சி ஆகியவற்றை விதையோடு கலந்து, 4 மணி நேரத்துக்கு நிழலில் உலர்த்தினால், விதை கடினமாகும். இப்படி கடினப்படுத்தி ஒரு மாதம் வரை சேமித்து வைக்கலாம். விதைக்கும் முன்பு... கடினப்படுத்திய 30 கிலோ விதையுடன்,  தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா அல்லது 400 கிராம் அசோஸ்பாஸ் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
டிராக்டரில் இயங்கும் விதைக் கலப்பைகள் மூலம் விதைக்கலாம். அல்லது நெல் விதைகளைப் பரவலாக விதைத்துவிட்டு... கொக்கிக் கலப்பை மூலம் 4 முதல் 5 அங்குல ஆழத்துக்கு லேசாகக் கீறி விட்டால், விதைகள் மண்ணில் புதைந்து கொள்ளும். இப்படிச் செய்யும்போது, கொக்கிக் கலப்பையால் ஏற்படும் பள்ளங்களில் மழைநீர் தேங்கி, பயிர் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். விதைகளைக் கடினப்படுத்தி இருப்பதால்... 30 நாட்கள் வரை முளைக்காமல் இருந்தாலும் பிரச்னை இல்லை. மழை கிடைத்ததும் முளைத்துவிடும். முளைப்பு எடுத்த 15 முதல் 20 நாட்களில் நிலத்தில் ஈரம் இருக்கும்போது, அடர்த்தியான இடங்களில் இருக்கும் பயிரைக் கலைத்து, பயிர் இல்லாத இடங்களில் நடவு செய்ய வேண்டும். பயிர்களின் எண்ணிக்கையையும், நீர் நிர்வாகத்தையும் முறையாகச் செய்தால்... இறவையில் கிடைக்கும் அளவுக்கான மகசூலை புழுதி விதைப்பிலும் எடுக்கலாம்.''
''சேற்று நிலங்களில் நேரடி விதைப்பு செய்வது எப்படி?''
''அதிக மழையால் தண்ணீர் தேங்கும் சம்பா பட்டத்தைத் தவிர, மற்ற எல்லாப் பட்டங்களிலும் நேரடி விதைப்பு செய்யலாம். வடிகால் வசதியுள்ள நிலங்கள் மட்டுமே நேரடி விதைப்புக்கு ஏற்றவை. சித்திரையில் கோடை உழவு செய்து, களைகளை அகற்றி... பசுந்தாள் உரச்செடியான தக்கைப்பூண்டை விதைத்துவிட வேண்டும். இதை பூவெடுக்கும் தருணத்தில் மடக்கி உழவு செய்து, தண்ணீர் கட்டி ஒரு வாரம் அழுக விட்டு, மீண்டும் உழுது சேறாக மாற்றிக் கொள்ள வேண்டும். நிலத்தை நாற்றங்காலுக்குத் தயார் செய்வது போன்று, பள்ளமோ, குழிகளோ இல்லாத அளவுக்கு சமப்படுத்தினால்தான், பயிர்கள் சீராக விளையும். பள்ளங்களில் விதைகள் முளைக்காது. தவிர, சமமாக இருந்தால்தான், சரியான முறையில் நீர் மேலாண்மையும், களைக் கட்டுப்பாடும் செய்ய முடியும்.
நடவு மூலமாக பயிரிடப்படும் அத்தனை நெல் ரகங்களையும் சேற்று நிலங்களில் நேரடி விதைப்பு செய்யலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் நேரடி விதைப்பு செய்ய, 24 கிலோ விதைநெல் தேவைப்படும். மண் மறையும் அளவுக்கு வயலில் தண்ணீர் கட்டி, விதைநேர்த்தி செய்யப்பட்ட விதையை நேரடி நெல் விதைப்புக் கருவி மூலம் விதைக்கலாம். இந்த முறையில் விதைக்கும்போது, முக்கால் அடி இடைவெளியில் ஒரு குத்துக்கு 4 முதல் 5 விதைகள் வீதம் சேற்றில் விழும். விதைத்ததில் இருந்து ஒரு வாரம் நாற்றங்கால் பராமரிப்பு செய்வது போன்று, தண்ணீர் கட்டி வடிக்க வேண்டும்.
14 முதல் 21 நாட்களுக்குள் ஒரே இடத்தில் அதிகமாக முளைத்திருக்கும் பயிர்களைக் கலைத்து, வேறிடத்தில் நடவு செய்ய வேண்டும். விதைத்த 10, 20 மற்றும் 30-ம் நாட்களில் கோனோவீடர் மூலம் களைகளை அழுத்தி விட வேண்டும். இதன் மூலம் களைகள் மட்கி, மண்ணுக்கு சத்துக்களைக் கொடுக்கும். அடுத்து, 35-ம் நாளில் களை எடுக்க வேண்டும். பயிர் வளர வளர, மண்ணில் தண்ணீரின் அளவையும், இரண்டு அங்குலம் வரை உயர்த்த வேண்டும். மற்றபடி, வழக்கமான நடவு முறைகளைப் பின்பற்றினாலே போதுமானது.''
''நடவு வயல்களைத் தயார் செய்வது எப்படி..?''
''குறுவை சாகுபடி செய்யும் நிலம், களிமண் கலந்த மணல் நிலமாக இருந்தால், அதிகமான ஊட்டம் கொடுக்கத் தேவை யில்லை. களிமண் நிலமாக இருந்தால், ஒவ்வோர் ஆண்டும் ஏக்கருக்கு 10 கிலோ தக்கைப்பூண்டு அல்லது சணப்பு விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழ வேண்டும். மணற்பாங்கான நிலமாக இருந்தால், ஒரு முறை மட்டும் ஏக்கருக்கு 10 கிலோ கொழுஞ்சி விதையை விதைத்து, பூவெடுத்ததும் மடக்கி உழ வேண்டும். பசுந்தாள் செடிகள் மடக்கி உழவு செய்யப்பட்ட நிலங்களில், தேவையான அளவுக்கு தண்ணீர் கட்டி, ஒரு வார காலம் அழுக விட வேண்டும். அந்த சமயத்தில் எந்தக் காரணத்துக்காகவும் நிலத்தில் இருக்கும் தண்ணீரை வடிக்கக் கூடாது. அப்படி, செய்தால்... சத்துகள் தண்ணீரோடு வெளியேறி விடும். பசுந்தாள் விதைப்பை முறையை சரியாகக் கடைபிடித்தால், நடவு வயலில் அடியுரமாக எதையும் கொடுக்கத் தேவை யில்லை.
பசுந்தாள் உரமுறைகளை சரியாகக் கடைபிடிக்க முடியாதவர்கள், ஆட்டுக்கிடை அல்லது மாட்டுக்கிடையை நிறுத்தலாம். அல்லது நடவுக்கு முன்பு ஏக்கருக்கு 5 டன் தொழுவுரத்தைக் கொட்டி, கலைத்து உழவு செய்து நடவு செய்யலாம். நான்கு பக்கமுள்ள வரப்புகளில் 'அண்டை’ வெட்டி வரப்பை சுத்தமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நடவு செய்வதற்குத் தேவையான அளவுக்கு மூன்று, நான்கு சால் உழவு செய்து மேடு-பள்ளம் இல்லாத அளவுக்கு நிலத்தை சமப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகமான மேடு, பள்ளங்கள் இருந்தால்... கோடைக் காலங் களில் 'லேசர் லெவலர்’ கொண்டு நிலத்தை சமப்படுத்தலாம்.''
- Vikatan

வயல்வெளிப் பள்ளி கேள்விகளும்... பதில்களும்! - 3

ஒவ்வொரு பயிரைப் பற்றியுமான அத்தனை கேள்விகளுக்கும் விடையாக மலரும் இந்தப் பகுதியில், நெல் பயிரைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நெல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர் ராபின்.
''ஒற்றை நாற்று நடவுக்கு, மேட்டுப்பாத்தி மூலம் நாற்றங்கால் தயார் செய்வது எப்படி?''
''தண்ணீர் வசதியோடு, களியும், மணலும் கலந்த இருமண் பாங்கான நிலத்தைத் தேர்வு செய்து கொள்ளவேண்டும். இரண்டு சால் உழவு செய்து, ஒரு ஏக்கருக்கு நான்கு சென்ட் நாற்றங்கால் தேவை. அதில் ஒரு சென்ட் நிலத்துக்கு 50 கிலோ என்ற கணக்கில் தொழுவுரத்தைக் கொட்டி கலைத்துவிட வேண்டும். மீண்டும் இரண்டு சால் உழவு செய்து, 4 அடி அகலம், 4 அங்குல உயரத்துக்கு மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும். மேட்டுப்பாத்தியின் மீது, விதை பாவுவதற்கு முதல் நாள் ஒரு லிட்டர் தண்ணீர், ஒரு லிட்டர் பஞ்சகவ்யா, 50 கிராம் சூடோமோனஸ் கலந்த கலவையைத் தெளித்துவிட வேண்டும். பிறகு, முளைவிட்ட மூன்றாம் கொம்பு விதைகளை மேட்டுப்பாத்தியின் மீது தூவி... கொஞ்சம் தொழுவுரத்தையும் தூவ வேண்டும்.
ஒற்றை நாற்று நடவு என்றால், ஏக்கருக்கு 3 முதல் 4 கிலோ விதை தேவைப்படும். பிறகு, சுத்தமான வைக்கோலை (நெல் மணிகள் நீக்கம் செய்யப்பட்டது) கொண்டு மேட்டுப்பாத்திகளை மூடி, பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஏழு நாட்கள் வரை தொடர்ச்சியாக தினமும் இரண்டுவேளையும் இப்படி வாளியால் தண்ணீர் தெளித்து விட வேண்டும். 7-ம் நாளில் மேட்டுப்பாத்தியின் மீது இருக்கும் வைக்கோலை நீக்கினால், விதைகள் முளைப்பு எடுத்திருப்பது தெரியும். 10 முதல் 12 நாட்களில் ஒரு சென்ட் நிலத்துக்கு, இரண்டு கிலோ என்ற கணக்கில் வேப்பம் பிண்ணாக்கைத் தூவ வேண்டும். 14 முதல் 18 நாட்களில் நடவுக்கு நாற்று தயார் ஆகிவிடும்.''
''ஒற்றை நாற்று நடவுக்குத் தேவையான நாற்றுகளை பிளாஸ்டிக் குழித்தட்டுகளில் உற்பத்தி செய்வது எப்படி?''
''ஒரு ஏக்கர் நடவு செய்வதற்கு 10 பிளாஸ்டிக் தட்டுகளில் (ட்ரே) மண் அல்லது மணலையும், தொழுவுரத்தையும் சமஅளவில் கலந்து நிரப்பி, வழக்கமான முறையில் விதைநேர்த்தி செய்த தரமான விதைகளில் இரண்டு கிலோ அளவுக்கு தூவ வேண்டும். பிறகு, விதைகள் மீது சுத்தம் செய்யப்பட்ட வைக்கோலால் மூடி, பூவாளியால் தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு வாரத்தில் வைக்கோலை நீக்கிப் பார்த்தால் விதைகள் முளைத்திருப்பது நன்றாகத் தெரியும். இந்த முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்யும்போது நடவு வயல்களுக்கு எடுத்துச் செல்வதும், நடவு செய்வதும் எளிதாக இருக்கும்.''
''இயந்திர நடவுக்கான நாற்றுகளைத் தயார் செய்வது எப்படி?''
''இயந்திர நடவுக்கு பிளாஸ்டிக் தட்டுகளில் நாற்றங்கால் அமைக்க வேண்டும். இதற்காக முதலில், சேறு தயாரிக்க வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்துக்கு, 4 சென்ட் என்ற கணக்கில் நிலத்தை எடுத்துக் கொண்டு, உழவு செய்தால், அதில் உள்ள சேறு போதுமானதாக இருக்கும். ஏக்கருக்கு 150 பிளாஸ்டிக் தட்டுகள் தேவைப்படும். இந்தத் தட்டுகளில் சேறு நிரப்பி, ஒவ்வொரு தட்டுக்கும் 80 முதல் 85 கிராம் விதைகளைத் தூவ வேண்டும். இந்த முறையிலான நாற்றங்காலுக்கு, நெல் விதையை 12 மணி நேரம் ஊற வைத்தால் போதும். விதை தூவிய பிறகு, சுத்தமான வைக்கோல் போட்டு மூடி, மூன்று நாட்கள் வரை பூவாளியால் தண்ணீர் தெளித்துவர வேண்டும். பிறகு, வைக்கோலை நீக்கிவிட்டு, வழக்கமான முறையில் பராமரித்தால் போதுமானது. இந்த நாற்றுகளை 14 முதல் 17 நாட்களில் எடுத்து நடவு செய்யலாம்.''
''புழுதி நாற்றங்காலில் நாற்று உற்பத்தி செய்வது எப்படி?''
''தென்மேற்குப் பருவமழையை நம்பி இருக்கும் ஏரிகள் மற்றும் ஆற்றுப் பாசனம் நடக்கும் பகுதிகளில்... சேற்று நாற்றங்காலைப் பராமரிக்கும் அளவுக்கு தண்ணீர் இல்லை. அதனால், மழையை நம்பி புழுதி நாற்றங்கால் முறையில் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். நாற்றங்காலுக்கு எட்டு சென்ட் தேவைப்படும். நீண்ட கால ரகம் என்றால், 12 கிலோ விதை தேவைப்படும். மத்திய கால ரகம் என்றால், 16 கிலோவும், குறுகிய கால ரகம் என்றால் 24 கிலோவும், உயர் விளைச்சல் ரகம் என்றால் 8 கிலோ விதையும் இருந்தால் போதுமானது. முதலில் இரண்டு சால் புழுதி உழவு செய்து, 400 கிலோ தொழுவுரத்தைக் கொட்டிக் கலைத்து, மீண்டும் இரண்டு சால் புழுதி உழவு செய்து நிலத்தை 'பொலபொல’ப்பாக மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு, நிலத்தைச் சமப்படுத்தி விதைக்க வேண்டும். பிறகு, மண்ணை பாவிவிட்டு, மேல்மண் அல்லது தொழுவுரத்தை விதை தெரியாத அளவுக்குத் தூவ வேண்டும்.
விதைகள் 20 முதல் 30 நாட்கள் வரை மழை இல்லாவிட்டாலும், பாதிக்கப்படாமல் அப்படியே இருக்கும். மழை கிடைத்த பிறகுதான் முளைக்கும். தண்ணீர் கட்டுவதற்கான வசதிகள் இருந்தால், நாற்றங்கால் முழுமை யாக நனையும் அளவுக்கு தண்ணீர் கட்டலாம். இந்த முறையில் எவ்வளவு தண்ணீர் கட்டினாலும் தேங்காது. முழுமை யாக தண்ணீர் கிடைத்த பிறகு, தொடர்ச்சியாக தண்ணீர் நிறுத்திக் கொள்ளலாம். அதற்குமேல் சேற்று நாற்றங்கால் போன்று பராமரித்து, அதே முறையில் நடவு செய்யலாம்.''
''நேரடி விதைப்புக்கு ஏற்றவை, பாரம்பரிய ரகங்களா... ஒட்டு ரகங்களா?''
''இரண்டு ரகங்களையும் நேரடி விதைப்பு செய்யலாம். ஆனால், ஒட்டுரகங்களைவிட பாரம்பரிய ரகங்கள் பல மடங்கு வறட்சியைத் தாங்கி வளரும் என்பதால், மானாவாரி நிலத்தில் பாரம்பரிய ரகங்களை விதைக்கலாம்.'
புழுதி விதைப்பு, நெல் சாகுபடியில் பின்பற்றும் முறைகள் ஆகியவை
அடுத்த இதழில்...
- Vikatan

அழிவின் விளிம்பில் அரசாங்க பனை... இது, ஆட்சியாளர்கள் செய்த வினை!

'விவசாயிகளின் வீழ்ச்சியில், தொழில் வளர்ச்சியை எனது அரசு ஊக்குவிக்காது' என்று தேர்தல் பிரசார மேடைகளில் தற்போது முழங்கிக் கொண்டிருக்கிறார்... தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா.
தொலைக்காட்சிகளில அவர் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம்... 'முதல்வர் அவர்களே... பனை விவசாயிகளையும்... பனைத் தொழிலாளர்களையும் நசுக்கிக் கொண்டிருக்கும்... சாராயத் தொழில் முதலாளிகளின் சூழ்ச்சி வலையை அறுத்தெறியத் தயங்குவதேன்?' என்கிற கேள்வி எனக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கிறது.
ஒரு காலத்தில், அறுசுவைகளில் ஒன்றான இனிப்புச் சுவையின் தமிழகத் தேவையை... பனைவெல்லம்தான் பூர்த்தி செய்துகொண்டிருந்தது. என்றைக்கு கரும்புவெல்லம் வந்து குதித்ததோ... அன்றைக்கே பனை வெல்லத்துக்கு வேட்டு ஆரம்பமாகிவிட்டது. ஒருபக்கம் கரும்பு ஆலைகள் பெருக... மறுபக்கம் சாராய ஆலைகளும் பெருக... பனைவெல்லம் மற்றும் கள் ஆகியவை ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டன.
கரும்பு சாகுபடிக்கு, அதிகம் தண்ணீர்த் தேவை. ஆனால், பனைக்கு அப்படி இல்லை. சொல்லப் போனால்... இதற்கு தனியாக தண்ணீர்ப் பாசனம் செய்வது என்பதே இல்லை. பருவமழையால் ஈரம்பட்ட நிலத்திலிருந்தும் பனி, காற்றில் உள்ள ஈரப்பதத்தை உள்வாங்கியும் தானே வளர்ந்துவிடும். 70, 80 ஆண்டுகளுக்கு மேலாகவும் தொடர்ந்து பலன் தரக்கூடிய அற்புதமான மர வகைகளில்... குறிப்பிடத்தக்க இடத்திலிருப்பவை, பனை மரங்களே! மேகங்களிலுள்ள நீரை, மழையாக பூமிக்கு ஈர்த்துத் தரும் சிறப்பு அம்சம் பெற்ற மரங்களின் பட்டியலில்... பனைக்கும் ஓரிடமுண்டு.
தமிழகத்தின் பல பாகங்களிலும் செழித்து வளர்ந்திருந்த பனை மரங்கள் காரணமாக... பருவம்தோறும் பனைவெல்லம் காய்ச்சும் மரபு, இங்கே தொன்றுதொட்டு இருந்து வந்தது. கள் இறக்குவதற்கு வரிக்கு மேல் வரியாக போடப்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட... பனையிலிருந்து கள் இறக்கும் தொழிலுக்கோ... அதன் மூலமாக பனை வெல்லம் தயாரிப்பதற்கோ... பெரிதாகப் பிரச்னை ஏதும் வரவில்லை.
ஆனால், 'மக்களாட்சி' என்று சொல்லிக் கொள்ளும் நம்முடைய முடிசூடா மன்னர்களின் ஆட்சிகளில்தான்... பனைத் தொழிலுக்கு பாதகம் வந்து சேர்ந்தது. 1987-ல் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் 'கள்ளுக்குத் தடை' எனும் கொடுமையான உத்தரவு பிறப்பிக்கபட்ட நாள் முதல்... அந்தத் தொழில் சின்னாபின்னமாகி விட்டது. பனைத் தொழிலாளர் குடும்பங்களின் வாழ்க்கையும் பாழும் கிணற்றில் தள்ளப்பட்டு விட்டது!
பெரும்பாலும் நிலத்தடி நீரை சுரண்டிச் சுரண்டியேதான் கரும்பு சாகுபடி நடக்கிறது. ஆனால், கடும்வறட்சியிலும்கூட, நம்மிடம் இருந்து துளி தண்ணீரையும் எதிர்பார்க்காமல், தானே தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, மனிதர்களுக்கும் இன்னபிற ஜீவன்களுக்கும்... அளவில்லாதப் பலன்களை வழங்கும் வள்ளல்களாக நிற்கின்றன பனைகள். பல நூற்றாண்டுகளாக மனிதர்களின் இனிப்புத் தேவையை நிறைவு செய்து வந்ததே... இந்தப் பனைகள்தான் என்பதை, கடந்த 20, 25 ஆண்டு கால ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை.
இன்றைக்கு எகிறிக்கிடக்கும் விலைவாசியிலும்... 35 ரூபாய், 45 ரூபாய் விலையிலேயே மக்களுக்குக் கிடைத்திருக்க வேண்டிய பனைவெல்லம்... கிலோ
100 ரூபாய், 150 ரூபாய் என்றெல்லாம் விற்கப்படுகிறது. மனிதர்களின் அத்தியாவசியத் தேவையாக இருக்கும் இந்த இனிப்புத் தயாரிக்கும் தொழில், 'கள்ளுக்குத் தடை' என்கிற அரசின் கண்மூடித்தனமான சட்டத்தால்... பரிதாப நிலைக்குப் போய்விட்டது.
சித்த வைத்தியம் போற்றிப் பாராட்டும் பனைவெல்லம், பலவிதமான நோய்களுக்கும் மருந்து. இத்தகையச் சிறப்பு வாய்ந்த, பனைவெல்லம்... சாமான்ய மக்களின் கைகளுக்கு எட்டாக்கனியாகிப் போனதன் பின்னணியில், பெரும் சூழ்ச்சி ஒளிந்திருக்கிறது. அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
'ஊக்க பானமான கள், மிகக்குறைந்த விலையிலேயே மக்களுக்குக் கிடைத்துவிட்டால்... சாராய விற்பனை பெருகாது' என்று உணர்ந்த சாராய முதலாளிகள், 1987-ல் உடல்நலம் குன்றியிருந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் மூலமாக, அமுதமான கள்ளுக்குத் தடை ஏற்படுத்தினர். இதற்காக அன்று சொல்லப்பட்ட காரணம்... 'ஏழை மக்கள் குடித்துக் குடித்தே சீரழிகிறார்கள்' என்பதுதான். அதேசமயம், வசதி படைத்தவர்களும்... கனவான்களும் மட்டுமே சீமைச் சாராயத்தைக் குடிக்கிறார்கள் என்றபடி, நாடு முழுக்க மதுபானக் கடைகளை திறந்துவிட்டார்கள். அது கடந்த 25 ஆண்டுகளில் பரிணாம வளர்ச்சி பெற்று, கிராமங்களிலும்கூட 'டாஸ்மாக்' கடைகளாக முளைத்துக் கிடக்கின்றன. பள்ளிக்கூட நோட்டு வாங்குவதற்காக அப்பாவிடம் பணம் வாங்கிச் செல்லும் சிறுவர்கள்கூட, அதை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து, 'சரக்கு' வாங்கி குடித்துவிட்டு, கூத்தடிக்கும் நிலை வந்துவிட்டது.
'புளிப்பேறாத கள், இனிப்பானது' என்பது காந்தியின் கூற்று. இதனாலேயே, 'கள் தாய்ப் பாலுக்குச் சமமானது' என்பார்கள். 'வள்ளல் அதியமானும்... தமிழ் மூதாட்டி ஒளவையும் கள் உண்டனர்' எனும் புறநானூற்றுச் செய்தியே, இதற்குச் சான்று.
ஆனால், 87-ம் ஆண்டிலிருந்து ஆட்சியாளர் களின் கட்சி கஜானாக்களாகவே... கரும்புக்கு உரிய விலை தராத சர்க்கரை ஆலைகளும்... பதநீரைப் பலிகொண்ட சாராய ஆலைகளும் மின்னி மிளிருவதால், தங்கத் தமிழ்நாட்டில் கள்ளுக்குத் தடை நீடிக்கிறது.
இந்த இம்சையிலிருந்து பனை விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு விடுதலை எந்நாளோ?!

- Vikatan

அபாய மணியோசை!

அபாய மணியோசை!
அனைவருக்கும் பசுமை வணக்கம்!
'பசிபிக் பெருங்கடலின் காற்றழுத்தம் மற்றும் காற்றின்போக்கு மாறியுள்ளதால், தெற்காசிய பகுதிகளில் 'எல் நினோ' (El Nino) விளைவுகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது' என்று அபாய எச்சரிக்கை மணியை அடித்துள்ளனர், அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய வானிலை விஞ்ஞானிகள்.
''ஆழ்கடலில் ஏற்படும் காற்றழுத்தத்தால் ஏற்படும் ஒரு நிகழ்வே 'எல் நினோ’. இதன் காரணமாக பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்து, அதன் விளைவுகள் இந்தியா உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் பாதிப்பை உண்டாக்கும். குறிப்பாக, விவசாயத்துக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இது, அடைமழை காரணமாக பெருவெள்ளப் பெருக்கு, சுழன்றடிக்கும் சூறாவளி அல்லது மழையின்மை காரணமாக ஏற்படும் கடும்வறட்சி என்று ஏதாவது ஒரு ரூபத்தில் தாக்குதல் நடத்தக்கூடும். கடந்த 2002, 2004 மற்றும் 2009... ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட்ட கடும்வறட்சிக்கு காரணகர்த்தாவே இந்த
'எல் நினோ'தான். எனவே, வரவிருக்கும் இயற்கைத் தாக்குதலை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்'' என்கிறார்கள் வானிலை விஞ்ஞானிகள்.
ஆனால், இந்த அபாய எச்சரிக்கை மணி, தேர்தல் திருவிழாவின் ஸ்பீக்கர் ஓசைகளுக்கு நடுவே, நம் அரசியல்வாதிகளின் காதுகளில் ஏறுவதற்கு வாய்ப்பே இல்லை. அதற்காக, நாம் இதை அப்படியே விட்டுவிட முடியுமா? பாதிப்பு நமக்குத்தானே!
தண்ணீர் அதிகம் தேவைப்படும் பயிர்களைத் தவிர்த்து, குறைந்த நீரில் விளையும் பயிர்களாக சாகுபடி செய்யலாம்; என்னதான் 'எல் நினோ’ வந்தாலும், ஒன்று, இரண்டு மழை கிடைக்காமல் போகாது. அதனால், மழை நீரை, சேகரித்து வைப்பதற்காக பண்ணைக் குட்டைகளை வெட்டி வைக்கலாம்; தண்ணீர் வற்றிப்போன போர்வெல்களில், மழைநீர் அறுவடை மூலமாக தண்ணீரைப் பொங்க வைக்கலாம்; மூடாக்கு எனும் அற்புதமான யுக்தியைப் பயன்படுத்தி, தண்ணீர் ஆவியாகாமல் தடுக்கலாம்.. இப்படி வேளாண் நிபுணர்கள் மற்றும் நீரியல் நிபுணர்கள் தரும் யோசனைகளை எல்லாம் மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
பிறகென்ன... வரப்போவது வறட்சியாக இருந்தாலும், வானம் பொத்துக்கொண்டு கொட்டுவதாக இருந்தாலும்... தைரியமாக சமாளிக்க முடியுமே!
- Vikatan

வானம் பார்த்த பூமி... வளமாக்கிய சூரியசக்தி... நனவான விவசாயக் கனவு..!

இன்று கை நிறைய சம்பளம் வாங்கிக் கொண்டு, வசதி வாய்ப்புகளுடன் நகர்புறங்களில் வசித்து வரும் அனேகரின் மனங்களிலும்... 'ஏதாவது ஒரு கிராமத்தில் கொஞ்சமேனும் நிலம் வாங்கி விவசாயம் செய்து ஓய்வு நாளைக் கழிக்க வேண்டும்’ என்கிற ஆசைக்கனவு இருந்துகொண்டேதான் இருக்கிறது. அதிலும், சிறு நகரங்கள் மற்றும் கிராமங்களில் பிறந்து வளர்ந்து பணி நிமித்தமாக பெரு நகரங்களில் நாட்களை நகர்த்திக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆசை சற்று கூடுதலாகவே இருக்கும்.
அந்த வகையில், குவைத் நாட்டில் பொறியாளராக வேலை செய்து வரும், திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகில் உள்ள நாகமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் எஸ்.கே. இளங்கோவன்... வறட்சி தாண்டவமாடும் வானம் பார்த்த பூமியை வளமான பூமியாக மாற்றி, தனது விவசாயக் கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். சோலார், சொட்டு நீர் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்து வரும் இளங்கோவனை அவரது பண்ணையில் சந்தித்தோம்.
''எங்களுது பரம்பரை விவசாயக் குடும்பம். மானாவாரி நிலங்கள்தான் இங்க அதிகம். ஆடு, மாடுகளை நம்பித்தான் பொழப்பு. இளசுகள் விசைத்தறி, வட்டிக்கடைனு வேற தொழில் பார்க்கக் கிளம்பிட்டாங்க. என்னைப் போல சிலர், படிச்சு வெளியூர், வெளிநாடுனு செட்டிலாகிட்டோம். நான் கோயம்புத்தூர்ல எம்.இ. படிச்சிட்டு, சில வருஷம் லெக்சரரா வேலை பார்த்தேன். இப்ப, 19 வருஷமா, குவைத் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துல ஆராய்ச்சிப் பொறியாளரா வேலை பார்த்துட்டுருக்கேன். என்னதான் காரு, பங்களானு வசதி வாய்ப்போட வாழ்ந்தாலும்... மனசுல விவசாயம் செய்யணும்ங்கிற ஆசை மட்டும் போகவேயில்ல. லீவுல ஊருக்கு வரும்போதெல்லாம் காரை எடுத்துட்டு நிலம் தேடுவேன். ஒரு வழியா எங்க ஊர்லயே அஞ்சு ஏக்கர் மானாவாரி நிலம் கிடைச்சுது'' என்று முன்னுரை கொடுத்த இளங்கோவன், தொடர்ந்தார்.
கொடீசியா கொடுத்த கொடை!
''நிலத்தை வாங்கி, போர்வெல் போட்டப்போ, 630 அடி ஆழத்துல தண்ணி கிடைச்சுது. வேலி போட்டு, மரப்பயிர்களை சாகுபடி செய்யத்தான் திட்டம் போட்டேன். ஆனா, கரன்ட் கனெக்ஷன் கிடைக்க தாமதமானதால, டீசல் மோட்டார் அமைக்க, ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிச்சேன். 'அது கட்டுபடியாகாது’னு நிறைய பேர் சொன்னாங்க. அதுல குழம்பிப் போய் இருந்த சமயத்துலதான், 2012-ம் வருஷம், ரொம்ப வருஷமா சந்திக்க முடியாம இருந்த பழைய நண்பர் ஒருத்தரோட போன்ல பேசற வாய்ப்புக் கிடைச்சுது. பேச்சுக்கு இடையில, நிலம் வாங்கின விஷயம் எல்லாத்தையும் சொன்னேன். அவருதான் 'கவலையேயில்லை. அதுக்கு ஒரு அருமையான தீர்வு இருக்கு. உடனே புறப்பட்டு, கொடீசியாவுல நடக்குற விவசாயக் கண்காட்சிக்கு வாங்க’னு கூப்பிட்டார். உடனே கிளம் பிட்டேன்.
அங்க போனதும் 'பசுமை விகடன்’ ஸ்டாலுக்கு அழைச்சுட்டு போனவர், 'பசுமை விகடன்’ புத்தகத்தை வாங்கி, அதில் வெளியாகி இருந்த சோலார் பவர் சம்பந்தமான கட்டுரையைப் படிக்கச் சென்னார். கரன்ட் கிடைக்காத ஒரு விவசாயி சோலார் பவரை பயன்படுத்தி பம்ப்செட்டை இயக்கி, தோட்டப் பயிர்களுக்கு பாசனம் செய்து வர்றதைப் பத்தி அதுல எழுதியிருந்தீங்க. 'சோலார்தான் என் பிரச்னைக்கான தீர்வு’னு என் மனசுக்கு பட்டுச்சு. அடுத்த நாளே சம்பந்தப்பட்ட விவசாயி தோட்டத்துக்குப் போய், சந்தேகங்களைக் கேட்டு தெளிவாகிட்டு உடனடியா என் தோட்டத்துலயும் சோலார் பேனல்களை அமைச்சு, 5 ஹெச்.பி. மோட்டாரை போட்டு, பாசனத்தை ஆரம் பிச்சுட்டேன்...'' என்றபோது இளங்கோவனின் முகத்தில் பளீர் பெருமிதம்!
ஆரம்பத்தில் மட்டும் செலவு...ஆயுளுக்கும் உண்டு வரவு!
''நான், 10 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்களை அமைச்சுருக்கேன். இதன் மூலமா 10 ஹெச்.பி. மோட்டார் வரை இயக்கலாம். போர்வெல் ஆழம், 630 அடி. இதுல இருந்து தண்ணி எடுத்து பாய்ச்சுனா, சொட்டு நீர்க் குழாய்களுக்கு அழுத்தம் பத்தாது. அதனால, போர்வெல்லுக்குப் பக்கத்துல 20 அடி விட்டம், 5 அடி ஆழத்துக்கு ஒரு கிணறு மாதிரி தோண்டி, சிமெண்ட் பூசி வெச்சுருக்கேன். இதுல, 55 ஆயிரம் லிட்டர் தண்ணியை நிரப்பலாம். 5 ஹெச்.பி. மோட்டார் மூலமா போர்வெல்லில் இருந்து தண்ணீர் எடுத்து இந்தக் கிணற்றில் நிரப்பி, 3 ஹெச்.பி. மோனோபிளாக் பம்ப்செட் மூலமா சொட்டு நீர்க் கருவிகளுக்கு இணைப்பு கொடுத்து பாசனம் செய்றேன். ஏக்கருக்கு 110 மரங்கள்ன்ற கணக்குல மலைவேம்பு கன்னுகளை நட்டுருக்கேன். முறையா பராமரிச்சா, ஏழு வருஷத்துல, ஒரு மரம் 7 ஆயிரம் ரூபாய்க்கு போகும்னு சொல்றாங்க'' என்ற இளங் கோவன், நிறைவாக,
''ஒரு கிலோ வாட் சோலார் பேனலுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். 10 கிலோ வாட்டுக்கு 12 லட்சம் ரூபாய் செலவாச்சு. அரசு மானியம் வேற இதுக்கு இருக்கு. ஆனா, அதுக்காக அலைய நேரமில்லாததால, சொந்தச் செலவுலயே அமைச்சுட்டேன். இதை பகல்ல மட்டுதான் இயக்க முடியும். காலையில எட்டரை மணியில இருந்து சாயங்காலம் நாலரை மணி வரை தொடர்ந்து இயங்கறதால, தடையில்லாம பாசனம் பண்ண முடியுது. மிதமான வெப்பம் உள்ள காலங்கள்ல செயல்பாடு குறையும்.
கரன்ட் பிரச்னைக்கு சூரிய ஓளி மின்சாரம் ஒரு நல்ல தீர்வு. ஆனா, அதோட விலை, சாதாரண விவசாயிகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு இருக்கு. வங்கிக்கடன், மானியம் எல்லாம் சரிவர கொடுத்து விவசாயிகளை ஊக்குவிச்சா, ரொம்ப உதவியா இருக்கும்'' என்கிற வேண்டுகோளுடன் விடைகொடுத்தார்.
குறிப்பு: இது அயல்நாட்டு எண் என்பதால், இவருடைய எண்ணுக்கு 'மிஸ்டு கால்’ கொடுத்தால் நேரம் கிடைக்கும்போது, அவரே திரும்பத் தொடர்பு கொள்வார்.
தொடர்புக்கு, எஸ்.கே. இளங்கோவன்,
செல்போன்: 00965992-39369.
மின்னஞ்சல்: skilangovan01@gmail.com

- Pasumai vikatan