Monday, March 10, 2014

மீத்தேன் எமன் - பாலைவனமாகும் பரிதாப டெல்டா

போராட்டம்
'கால் செருப்புக்கு தோல் வேண்டின்...
செல்வக் குழந்தையைக் கொல்வாரோ!
கண்ணிரண்டும் விற்று,
சித்திரம் பெற்றால்...
கைகொட்டி சிரியாரோ?'
-வளர்ச்சித் திட்டம் என்கிற பெயரில், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு, வேட்டு வைக்கக்கூடிய வீழ்ச்சித் திட்டங்களாக இந்த அரசுகள் கையில் எடுப்பதை நினைக்கும்போது, மகாகவி பாரதியின் இந்தப் பாடல் வரிகள்தான் என் நெஞ்சுக்குள்ளே முட்டி மோதுகின்றன.
இந்திய அரசின், 'எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகத்தின் கோரத் தாண்டவத்தால், திரூவாரூர் மாவட்டம், வெள்ளக்குடி கிராம மக்கள் சந்திக்கும் துயரங்கள்... எழுத்துக்களுக்குள் அடக்கிவிட முடியாதவை. அவர்களின் சோகக் கதை, பெட்ரோலுக்கும் மேலாகப் பொங்கி வெளிவந்தபடியேதான் இருக்கின்றன!
சுவாசிக்கச் சுத்தமான காற்று இல்லை; குடிக்கத் தூய்மையான தண்ணீர் இல்லை; வாழ்வாதாரங்களும் கையில் இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக, 'எந்த நேரத்திலும் நச்சுவாயு வெளியாகலாம் என்கிற அச்சத்தோடு... நித்தமும் நிச்சயமற்ற வாழ்க்கைதான் எங்களுடையது' என்று விரக்தியின் உச்சத்தில் நின்றபடி சொல்லும் அந்த மக்களின் கண்ணீர்... கழகங்களையோ, காங்கிரஸையோ, காவிகளையோ... ஏன் கம்யூனிஸ்டுகளைக்கூட இதுவரை எட்டவில்லை!
ஓ.என்.ஜி.சி.-யின் சேமிப்பு நிலையம், கெயில் நிறுவனத்தின் கேஸ் பிரிக்கும் நிலையம் மட்டு மல்லாமல்... தனியாருக்குச் சொந்தமான மிகப்பெரிய அளவிலான தொழிற்சாலைகள் பலவும் வெள்ளக்குடியில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. கெயில் நிறுவனத்தின் மூலமாக மிகக்குறைவான விலையில் இங்கு எரிவாயு கிடைப்பதால், சிலிகேட் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் செயல்படுகின்றன. பெரிய தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய பாய்லர்களுக்கான சுடுகற்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளும் செயல்படுகின்றன. இவை யெல்லாம் திறந்தவெளியில் ரசாயனங் களைக் குவித்து வைத்துள்ளன. காற்றில் கலந்து, சுற்றுவட்டாரப் பகுதி முழுக்க அவை படர்கின்றன. தொழிற்சாலைகளின் கழிவுகளும்கூட இந்த மக்களின் வயிற்றெரிச்சலை அள்ளிக்கட்டத் தவறவில்லை. வெட்டவெளியில், குறிப்பாக விளைநிலங்களிலும் நீர்நிலைகளிலும் ஆலைக் கழிவுகள் கொட்டப்படும் கொடுமையை எங்கே போய்ச் சொல்ல?
பட்டுப்போன தென்னை மரங்களைச் சுட்டிக்காட்டும் மக்கள், ''இப்படிப்பட்ட அநியாயத்தால, எங்க ஊரு மண்ணும் தண்ணியும் கடுமையா பாதிக்கப்பட்டிருக்கு. இதுக்கு இந்த தென்னை மரங்கள்தான் சாட்சி'' என வேதனையில் விம்முகிறார்கள்.
ஓ.என்.ஜி.சி.-யால் உருவெடுத்துள்ள பாதிப்புகள் வெள்ளக்குடி கிராமத்தோடு மட்டும் முடிந்துவிடவில்லை. இதன் கோரக் கரங்கள், சுற்றியுள்ள கிராமங்களின் கழுத்தையும் இறுக்கிக் கொண்டிருக்கின்றன. கமலாபுரம், வடுவக்குடி, ஒட்டநாச்சியார்குடி சிங்களாஞ்சேரி, தேவர்கண்டநல்லூர், பெருங்குடி, கட்டையந்தோப்பு, சாருவன், மூலக்குடி, எருக்காட்டூர், கொட்டாராக்குடி, பூந்தாளங் குடி, வேளுக்குடி, தாழைக்குடி... என அந்தக் கிராமங்களிலும் பயணித்தோம். இங்கெல்லாம் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட எண்ணெய்-எரிவாயுக் கிண்றுகள் படுபிர மாண்டமாக மிரட்டுகின்றன.
இந்தக் கொடுமைகள் அத்தனைக்கும்... ஓ.என்.ஜி.சி-யில் பணியாற்றும் அனைவருமே கூட சாட்சிகள்தான்! ஆனால், அங்கே பணியிலிருப்பதால் யாருமே வாய்திறக்க முடியாத நிலை. என்றாலும், உயர்அலுவலர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர், மனிதநேயத்தோடு சில முக்கியமான தகவல்களை என்னிடம் பகிர்ந்தார்.
''சவுதி அரேபியாவில் உள்ள பெட்ரோல், கேஸ் எடுக்கும் நிறுவனங்களுக்கு நான் போயிருக்கிறேன். அங்கு, 25 கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் குடியிருப்புகள் இல்லாத, பாலைவனப் பகுதிகளில்தான் பெட்ரோல், கேஸ் கிணறுகள் அமைத்துள்ளனர். கிணறு களில் இருந்து மீத்தேன், ஈத்தேன், புரோப்பேன் வாயுக்களோடு... ஹைட்ரஜன்-சல்ஃபைடு வாயுவும் வெளியில் வரும். இது மிகவும் ஆபத்தான நச்சுவாயு. குறைவான விகிதாசாரத்தில் இருந்தால், காஸ்டிக் சோடாவைக் கலந்து எரித்து விடுவார்கள். ஹைட்ரஜன்-சல்ஃபைடு பல கிலோ மீட்டர் தூரத்துக்கு காற்றில் பயணம் செய்தால்தான் அதன் கடினத்தன்மை குறையும். இதை சுவாசித்தால், கண்டிப்பாக சுவாச நோய்கள் உருவாகும். இக்காற்று, மனிதர்கள் மீது படர்ந்தால்... தோல் வியாதிகள் உருவாகும். மண்ணில் படர்ந்தால், நுண்ணுயிரிகள் அழிந்துவிடும். இதனால்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஹைட்ரஜன்-சல்ஃபைடு வாயுவை எரிப்பதில்லை. ஆனால், இங்கு வெள்ளக்குடி, அடியக்கமங்கலம் போன்ற பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே, அதுவும் விளைநிலங்கள் உள்ள பகுதிகளிலேயே ஹைட்ரஜன்-சல்பைடு எரிக்கப்படுகிறது. பெட்ரோல்-கேஸ் கிண்றுகளில் எந்த நேரத் திலும் மிக அதிக அளவில் ஹைட்ரஜன்- சல்ஃபைடு வாயு வெளிவரக்கூடிய வாய்ப்பு கள் அதிகம். அதுபோல் வந்தால், கட்டுப் படுத்துவது அத்தனை எளிதான காரியமல்ல.      
இந்த எண்ணெய் கிணறுகளில், கேஸ், கச்சா எண்ணெய், கடினத் தன்மையுள்ள உப்பு நீர் எல்லாம் கலந்திருக்கும். இந்த உப்பு நீர், கடல் நீரை விட 10 மடங்கு அதிகம் உப்புத் தன்மை கொண்டது. வெளிநாடுகளில் இதனை முறையாக சுத்திகரித்து அப்புறப் படுத்துகிறார்கள். இங்கு... வெட்டவெளியிலேயே, விளைநிலங்களிலேயே கொட்டப்படுகிறது. பெட்ரோல்-எரிவாயுக் கிணறுகள் அமைக்கப்படும்போது, குழாய்கள் மண்ணுக்குள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, ரசாயனம் கலந்த தண்ணீர் உள்ளே செலுத்தப்படும். இது உள்ளே இருக்கும் இடிபாடுகளை வெளியில் கொண்டு வரும். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த ரசாயன தண்ணீரும் விளைநிலங்களைப் பாழ்படுத்தக்கூடியது. இதுவும் இங்கேயே கொட்டப்படுகிறது. இந்தக் கிணறுகளை சுத்தம் செய்ய, ஆசிட் சர்குலேஷன் செய்யப்படுகிறது. இந்த அமிலங்களும் முறையாக அப்புறப்படுத்தப் படுவதில்லை'' என்று அவர் பட்டியலிட்டுக் கொண்டே போக... அடிவயிறு பற்றி எரிந்தது எனக்கு!
அத்தனையும் உண்மைதான் என்பதற்கு ஏதாவது சாட்சி? ஆம் நிறையவே...
கிராமத்தில் பரிதாபமாக உயிரிழந்த ஒரு சிறுவன்... உடல் உருக்குலைந்து நடமாடிக்கொண்டிருக்கும் ஒரு மாணவன்... மரணத்தைத் தழுவிய விளைநிலங்கள்... வெடிகுண்டு சோதனையால் அதிர்ந்து கிடக்கும் கிராமங் கள்... என நிறையவே இருக்கின்றன! அவை அடுத்த இதழில்...

- Vikatan

மூலிகை வளம் - குப்பைமேனி!

மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்துவிட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே.... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.
இந்த இதழில் வீதியெங்கும் விளைந்து கிடக்கும் குப்பைமேனி பற்றி அறிந்து கொள்வோம்...
'குப்பையில் கிடக்கும் கோமேதகம்’, 'சேற்றில் முளைத்த செந்தாமரை’ எனச் சொல்வார்களே... அதற்கு முற்றும் பொருத்தமானது, குப்பைமேனி. வாய்க்கால், வரப்பு, சாலையோரங்கள், குப்பைமேடுகள் எனக் காணும் இடங்களிலெல்லாம் துளிர்த்துக் கிடக்கும் குப்பைமேனி... மனிதனைக்  காக்கும் அற்புத மூலிகை என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?
குப்பையான மேனியைக் குணப்படுத்தும்!
'உணவே மருந்து... மருந்தே உணவு’ எனச் சொன்ன முன்னோர்களின் அறிவை, கை கொள்ளாததன் விளைவு, பல்வேறு பிணிகளால் பின்னப்பட்டுக் கிடக்கிறது, நம் உடம்பு. இப்படி, நோயால் குப்பை போல் ஆகிவிட்ட மேனியை குணப்படுத்துவதால்தான் இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்திருக்குமோ... என ஆச்சரியப்படும் வகையில் இருக்கிறது, இதன் பயன்பாடு. குப்பைமேடுகளில் வளர்வதால்... இதற்கு குப்பைமேனி என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
பூனைவணங்கி!
இதை, 'மார்ஜால மோகினி’ என வடமொழியில் அழைக்கிறார்கள். 'மார்ஜாலம்’ என்றால் பூனையைக் குறிக்கும்.
'பூனைவணங்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. 'குப்பைமேனியில் உள்ள கந்தகச்சத்து, பூனையின் கண்களுக்கு எரிச்சலைக் கொடுப்பதால், அதன் அருகில் வரும்போது பூனையானது கண்களை மூடிக் கொள்ளும். அதேசமயம், ஆரோக்கிய குறைவான உணவை உண்பதால் பூனைகளுக்கு ஏற்படுகிற நஞ்சினை நீக்குவதற்கான மருந்து, குப்பை மேனியில்தான் இருக்கிறது. எனவே, கந்தகத் தாக்குதல் குறைவாக இருக்கும் இரவு வேளைகளில் சென்று, குப்பைமேனி இலைகளை பூனைகள் உண்ணும். அதனால்தான் பூனைவணங்கி என்று பெயர் வந்தது' என்று இதற்கு விளக்கம் சொல்கிறார்கள்.
குப்பைமேனி சிறுசிறு கிளைகளுடன் உள்ள அடர்த்தியான செடி. இலையின் ஓரங்கள் ரம்பத்தின் பற்களைப் போன்று இருக்கும். பச்சை நிறத்தில் மிளகு போன்ற காய்கள் இதில் காய்க்கும். இது, விதை மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. இதன் இலைகளின் அமைப்பே வித்தியாசமானது. மாற்றடுக்கில் அமைந்துள்ளதால், உச்சிவெயில் நேரத்தில் ஓர் இலையின் நிழல், அடுத்த இலையின் மீது விழாது.
குடற்புழு நீக்க மருந்து!
குப்பைமேனி குணமாக்கும் நோய்களின் எண்ணிக்கை ஏராளம். இதன் இலை, வேர் அனைத்தும் மருத்துவப் பயன்பாடு நிறைந்தவை. குப்பைமேனி செடியை வேருடன் பிடுங்கி, அப்படியே நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கி உலர வைக்க வேண்டும். அதில் ஒரு கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டுக் காய்ச்சி, ஆற வைத்து வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் குடித்தால்... பேதியாகி மலத்துடன் வயிற்றுப் பூச்சிகள், கிருமிகள் வெளியேறிவிடும். இலையை பொடி செய்து சாப்பிட்டும் பூச்சிகளை வெளியேற்றலாம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான அற்புதத் தீர்வு, இதன் இலையும், வேரும். குழந்தைகளுக்கு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்யச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். இதற்கு ஆங்கில மருந்துக்கடையில் ஒரு குப்பியை வாங்கி பயன்படுத்தி வருகிறோம். அதைவிட குப்பைமேனி இலையை அரைத்து சாறெடுத்து, குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி கொடுத்தாலே போதுமானது.
மூலம் முற்றிலும் குணமாகும்!
வயது வித்தியாசமின்றி பலரும் இன்று மூல நோயால் அவதிப்படுகிறார்கள். காரமான உணவு உண்பது; சரிவிகித உணவாக இல்லாமல் புரதம் நிறைந்திருக்கும் உணவை மட்டும் உண்பதால் ஏற்படும் மலச்சிக்கல் ஆகியவைதான் மூல நோய்க்கு முக்கியமான காரணங்கள். இந்நோய்க்கு எளிதான தீர்வு, குப்பைமேனி.
அறுவை சிகிச்சைக்கும் அசைந்து கொடுக்காத மூலத்தை, நிர்மூலமாக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு இருக்கிறது. குப்பைமேனியை வேருடன் பிடுங்கி, நிழலில் உலர்த்தி சூரணம் செய்து, 5 கிராம் அளவு எடுத்து பசு நெய்யோடு சேர்த்து 48 நாட் களுக்கு காலை, மாலை என இருவேளைகளும் உண்டு வந்தால்... ஆசன மூலம், பக்க மூலம், சிந்தி மூலம், மேக மூலம், சரக்கண்ட மூலம், மாலை மூலம், கொடி மூலம், கண்டமாலை என எட்டு வகையான மூல நோய்களும் கட்டுப்படும்.  
தோல் நோய் குணமாகும்!
ஆஸ்துமா, சைனஸ்... போன்ற  நோய்களைக் குணமாக்கும் ஆற்றலும் குப்பைமேனி இலைக்கு உண்டு. இது, உடலில் வெப்பத்தை உண்டாக்கி, நாள்பட்ட கோழையைக்கூட வெளியேற்றி விடும். இலையை உலர்த்தி சூரணம் செய்து, சின்ன நெல்லிக்காய் அளவு தேனில் கலந்து கொடுத்து வந்தால்... இருமல், இரைப்பு, கபம் குணமடையும். சொறி, சிரங்கு போன்ற பல்வேறு தோல் நோய்களுக்கு, குப்பைமேனி தைலத்தை
15 நாட்கள் தொடர்ந்து தடவி வந்தால்... 'ஸ்கின் பிராப்ளமா... எனக்கா?’ எனக் கேட்கும் அளவுக்கு 'அடடா’ மாற்றத்தை உணர்வீர்கள். இப்படி, தலைவலி, வாத நோய், படுக்கைப் புண்கள்... என இது தீர்க்கும் நோய்கள் ஏராளம், ஏராளம். தான், குப்பையில் வளர்ந்தாலும் மனிதர்களின் நோய்களை அறுக்கும் குப்பைமேனி ஆராதிக்கப்பட வேண்டிய ஒன்று.

- Vikatan