Friday, February 28, 2014

மரபணு மாற்று விதைகளும்... மாய்மால விஞ்ஞானிகளும்!

''இந்தியா போன்ற பெரிய நாடுகளில் உணவு தானியத்துக்கான தேவை அதிகம். ஆகையால், மரபணு மாற்றுப்பயிர் தொழில்நுட்பத்தை முற்றிலும் புறம்தள்ளக் கூடாது. அதில் உள்ள நன்மைகளைக் கணக்கில்கொள்ள வேண்டும்.
பன்னாட்டு நிறுவனங்கள் கண்டுபிடித்த மரபணு மாற்றுப் பயிர் தொழில்நுட்பம் வேண்டாம் என்றால்... இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி நிலையத்திலேயே, இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு மரபணு மாற்றுப் பயிர் ஆய்வைச் செய்யலாமே! இப்போது நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவுப் பயிர்கள், ஒரு காலத்தில் காடுகளில் இயற்கையாக விளைந்து கிடந்தன.
அதில் நல்லவற்றை தனிப்பயிர்களாக சேகரித்து, பெரிய அளவில் உற்பத்தி செய்து கொண்டோம். அதேபோல, மரபணு மாற்று தொழில்நுட்பத்திலும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம்...."
-இப்படி ‘விலையில்லா’ ஆலோசனைகளை அள்ளி வீசியிருக்கிறார், வெளிநாட்டில் குடியேறி, அங்குள்ள கம்பெனிகளின் பணத்தில் பலவிதமான ஆராய்ச்சிகளை செய்து, அதற்காக நோபல் பரிசையும் பெற்றிருக்கும்... இந்தியாவைச் (சிதம்பரம்) சேர்ந்தவரான விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்!

இது, சில மாதங்களுக்கு முன் இந்தியா வந்தபோது இவர் பேசிச் சென்றது.

''அறிவியல்பூர்வமற்ற விமர்சனங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது. மரபணு மாற்று விதைகள் மூலமே தானிய உற்பத்தியைப் பெருக்க முடியும்... இந்தியாவின் பஞ்சத்தைப் போக்க முடியும்"

-கடந்த சில வாரங்களுக்கு முன் காஷ்மீர் மாநிலத்தில் நடந்த தேசிய அறிவியல் மாநாட்டில், நம்முடைய இந்தியாவின் மேன்மைமிகு பிரதமரும், அமெரிக்காவின் கெழுதகை நண்பருமான திருவாளர் மன்மோகன் சிங் ஆற்றிய வீர உரை இது.

இப்படிப்பட்ட அறிவுரைகள் எல்லாம், சமீபகாலமாக எதற்காக வேகமெடுக்கின்றன என்று யோசித்துக்கொண்டிருந்த நிலையில், இதோ 'பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது' என்பதுபோல, நேற்றைய தினம் (பிப்ரவரி 27) அரிசி உள்பட பலவகை தானியங்கள் மற்றும் காய்கறிகளில் மரபணு மாற்று பரிசோதனைக்கான கதவைத் திறந்துவிட்டிருக்கிறார் இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி!

நம்முடைய வேளாண் விஞ்ஞானிகளும், அறிவியல் அறிஞர்களும் ஒப்புதலும் அறிவுரைகளும் கொடுத்துவிட்ட பிறகு, எதற்காக யோசிக் வேண்டும் என்று அதிரடியாக இப்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் மொய்லி.

அறிவுரைகள் சொல்வது என்றால், யாருக்குமே கசப்பதில்லை. அதிலும், ‘அறிவியல் அறிஞர்’ என்கிற பட்டம் ஒட்டிக் கொண்டுவிட்டால் போதும், ‘நாம் எதைச் சொன்னாலும் ஆட்டுமந்தை மாதிரி அனைவரும் தலையசைத்துக் கேட்பார்கள்' என்றொரு நம்பிக்கை ‘அறிவாளி’களுக்கு வந்துவிடுகிறது. இஷ்டம்போல அள்ளிக் கொட்ட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

மக்களுக்கா... கம்பெனிகளுக்கா?

இவர்கள் எத்தனை அறிவாளிகளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்... எத்தனை எத்தனை நோபல் பரிசுகளை வேண்டுமானாலும் அள்ளிக் குவித்துக் கொள்ளட்டும். ஆனால், இயற்கையிடம் இருந்து இவர்கள் எந்த அளவுக்குப் பாடம் படித்தார்கள் என்பதில்தான் இருக்கிறது... இவர்களின் கண்டுபிடிப்புகள், அறிவுரைகள் எல்லாம் மக்களுக்கு நன்மை செய்வதற்காகவா... அல்லது மக்களின் பெயரால் தங்களை வளர்த்துக் கொள்ளும் கம்பெனிகளை வாழவைப்பதற்காகவா என்பது!

விவசாயம் சார்ந்து எந்த கண்டுபிடிப்பு வந்தாலும், ‘இந்தியா போன்ற நாடுகளில், அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியை பெருக்க வேண்டியிருக்கிறது. அதனால், விவசாயத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் அவசியம். குறிப்பாக மரபணு மாற்றுப்பயிர் ஒன்றுதான் நூற்றி இருபது கோடி மக்களுக்கும் சோறு போட முடியும்‘ என்றே இந்த ‘அறிவாளி’களும் சரி... பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஜால்ரா தட்டும் நம்மூர் அரசியல்வாதிகளும் சரி... பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.

தேவை, பரந்த மனது!

இந்தியா போன்ற நாட்டிலிருக்கும் மக்களுக்கு உணவளிக்க... எந்த அறிவியலும் தேவையில்லை. உண்மையான அறிவு மட்டுமே தேவை. அதாவது... பகுத்தறிவு மட்டுமே தேவை. ஆம், இங்கே தேவைக்கு மேலேயேதான் உற்பத்தியாகிறது. ஆனால், தேவையில்லாமல் வீணடிக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.

அரசாங்கத்தின் குடோன்களில் சேமிக்கப்படும் கோதுமை, அரிசி போன்ற உணவு தானியங்கள் ஆண்டுதோறும் பல ஆயிரம் டன்கள் பூச்சிப் பிடித்து வீணாகிக் கொண்டிருக்கின்றன. ‘இப்படி வீணடிப்பதற்கு பதிலாக, ஏழைகளுக்கு அதையெல்லாம் பகிர்ந்தளிக்கலாமே’ என்று கடந்த ஆண்டுகளில் மத்திய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சாட்டையை சுழற்றியது ஒன்றே போதும், இங்கே எந்த அளவுக்கு உணவுப் பொருட்கள் வீணடிக்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த!

இதுமட்டுமா... ஆடம்பர திருமணங்கள், பலவிதமான ஆர்ப்பாட்டமான நிகழ்வுகள் என்றெல்லாம் தினம்தினம் டன் டன்னாக இங்கே வீணடிக்கப்படும் உணவுகளை அளவிட்டால்... அதையெல்லாம் எழுதி வைக்க பூமியின் சுற்றளவுக்கும் மேலாக காகிதம் தேவைப்படும். நட்சத்திர விடுதிகள், உணவு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் என்று பல இடங்களிலும் சாப்பிடுபவர்களின் வாயில் இருப்பதைவிட, தட்டில் மிச்சமாக வைக்கப்படுவதுதான் அதிகமாக இருக்கிறது.
தட்டு நிறைய வைக்கப்படும் உணவிலிருந்து, ‘ஸ்டைல்’, ‘பந்தா’ என்று பலவிதங்களிலும் துளியூண்டு மட்டுமே கிள்ளி சாப்பிடுகிறார்கள். மீதி, வீணே குப்பைக்குத்தான் போய்ச் சேருகிறது. உணவுக்குக் கூட இங்கே திருவிழா எடுத்து, பசிக்காக சாப்பிடுவது என்பதை மறக்கடித்து... பந்தாவுக்காகவும்... கையில் பணமிருக்கிறது என்பதற்காகவும், தங்களுடைய பெருமையை பறைசாற்றிக் கொள்வதற்காகவும் உணவைப் பயன்படுத்துவது தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறது. இப்படி வீணடிக்கப்படும் உணவுப் பொருட்களை அளவெடுத்தால்... இன்னும் இரண்டு, மூன்று இந்தியாவுக்குகூட சோறு போட முடியும். அதற்கு தேவை... பரந்த மனதுதான்.

விஞ்ஞானிகளே, இதை ஏன் செய்ய மறுக்கிறீர்கள்?

‘இப்படி உணவை வீணாக்குகிறோமே...’ என்கிற எண்ணம், இந்த பகட்டு ஆசாமிகளின் மனதில் வரவேண்டும். அத்தகைய எண்ணங்களை உருவாக்கும் வேலைகளை இந்த விஞ்ஞான ‘அறிவாளி’களும், விதண்டாவாத அரசியல்வாதிகளும் செய்தால்... அது இந்த நாட்டுக்கு... ஏன், இந்த பூமிக்கே பயன்தருவதாக இருக்கும்.
அதைவிடுத்து, திரும்பத் திரும்ப அறிவியல் ஆராய்ச்சி என்கிற பெயரில், உண்ணும் உணவுக்காக பல்லாயிரம் ஆண்டுகளாக இயற்கையே நமக்காக உருவாக்கி வைத்திருக்கும் உணவுப் பொருட்களின் விதைகளில் விளையாடத் தேவையில்லை. புதிதாக விதைகளை உருவாக்குகிறேன் என்கிற பெயரில் ஆய்வுக்கூடங்களை அமைத்து, தேவையில்லாமல் இந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு கேடான வேலைகளைச் செய்யத் தேவையில்லை.

இவர்கள் சொல்லும், ‘மரபணு மாற்றுப்பயிர்’ பற்றி சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பலர் கேள்விப் பட்டிருக்க மாட்டீர்கள். அது வேறொன்றும் இல்லை, இங்கே பயிர் செய்யப்படும் உணவு தானியங்களை பூச்சிகளும், பறவைகளும் கொஞ்சம் காலி செய்கின்றன. இதைத் தடுப்பதற்காக, காலகாலமாக வேப்பிலை போன்ற கசப்பான பொருட்களில் இருந்து திரவங்களைத் தயாரித்து தெளித்து, இயற்கையான முறையில் கட்டுப்படுத்தி வந்தார்கள் நம் முன்னோர்கள்.

பின்னர், பூச்சிக்கொல்லி என்கிற பெயரில் வீரிய விஷ மருந்துகளை உற்பத்தி செய்த வெள்ளைக்காரர்கள், அதை நம் தலையில் கட்டினார்கள். அதைத் தெளித்த மாத்திரத்தில் புழு, பூச்சிகள் எல்லாம் சுருண்டு விழுந்து சாக, பறவைகள் எல்லாம் தலைதெறிக்க ஓட... ‘ஆகா, வராது வந்த மாமணியே!’ என்று முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்... அந்த எமனுக்கு வரவேற்பு வளைவு கட்டி வரவேற்று, இங்கே நிரந்தரமாக குடியேற்றி விட்டோம்.

காலங்கள் உருண்டோட... பூச்சிகளை ஒரே நாளில் கொன்ற அந்த விஷம், நம்மை கொஞ்சம் கொஞ்சமாக கொன்று கொண்டிருக்கிறது என்கிற உண்மையை  உணர ஆரம்பித்தபோது... உலகமே அதிர்ந்து எழுந்தது. ஆம், இன்றைக்கு இங்கே புதிது புதிதாகப் பரவிக் கிடக்கும் பலவிதமான நோய்களுக்கு மூலகாரணியே... வேளாண்மையில் தாறுமாறாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளின் எச்சங்களால் வந்தவையே!

விளைவு... பல நாடுகளில் பூச்சிக்கொல்லி விஷங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில்கூட எண்டோசல்பான் எனும் விஷத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, உச்ச நீதிமன்றமே அதற்கு தடை விதித்துள்ளது.

மில்லியன் டாலர் பிஸினஸ்!

இத்தகைய வரலாற்றுப் பின்னணியில் பிறந்திருப்பதுதான் இந்த மரபணு மாற்றுப்பயிர்கள். பூச்சிக்கொல்லி விஷங்களைத் தயாரித்து, பல மில்லயன் டாலர்கள் என்று பணம் பார்த்துக் கொண்டிருந்த பன்னாட்டு நிறுவனங்கள், அந்த வருமானத்தை இழக்க விரும்பவில்லை. அதற்காக கண்டுபிடித்ததுதான்... மரபணு மாற்றுப்பயிர். அதாவது, மண்ணில் இருக்கும் நுண்ணுயிரி ஒன்றின் மரபணுவை எடுத்து, பயிரின் விதைக்குள் செலுத்தி, அந்தப் பயிரிலேயே பூச்சிகளுக்கு எதிரான விஷத் தன்மையை உருவாக்கும் தொழில்நுட்பம்தான் இந்த மரபணு மாற்றுத் தொழில்நுட்பம். ஏற்கெனவே பயிரின் மீதுதான் விஷத்தைத் தெளித்தார்கள். தற்போது, பயிருக்குள்ளேயே ‘டெக்னாலஜி’ கொண்டு விஷத்தைத் திணித்துள்ளனர்.

மரபணு மாற்றப்பட்ட பயிரை, புழு மற்றும் பூச்சிகள் சாப்பிடாது என்பதுதான் நம் முன்பாக வைக்கப்படும்மிகமுக்கியமான பிரசாரம்! இதனால் பூசிகொல்லி தெளிக்கும் செலவு குறையும் என்றும் வலை வீசுகிறார்கள். புழு, பூச்சிகளே சாப்பிடாது என்றால், அந்தப் பயிரில் நிச்சயமாக அவற்றுக்கு எதிரான விஷம் இருக்கும்தானே! மனிதர்கள் மட்டும் எப்படி சாப்பிட முடியும்? இதைக் கேட்டால், ஆளாளுக்கு ‘விஞ்ஞானி’ என்கிற பெயரில், மற்றவர்களையெல்லாம் ‘முட்டாள்’ ஆக்குவதற்காக பாய்ந்தோடி வருகிறார்கள்.

ஐயா... அனைத்தும் அறிந்த புத்திசாலிகளே..! நாங்கள் முட்டாள்கள்தான். இந்த பூமியில் தாவரங்களைப் படைத்த இயற்கை, இது... புழு மற்றும் பூச்சிகளுக்கு, இது பறவைகளுக்கு, இது மனிதர்களுக்கு என்று பிரித்துப் பிரித்துப் படைக்கவில்லை. நாம் சாப்பிடும் அனைத்தையுமே புழு, பூச்சிகளும் பறவைகளும் சாப்பிடவே செய்கின்றன. அப்படியென்றால், அந்த உயிரினங்களே சாப்பிடாத உணவுப் பயிர்களை, நாம் எப்படி சாப்பிட முடியும்? என்றுதான் கேட்கிறோம். முட்டாள் தனமான எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

ஐரோப்பாவில் கடை திறக்க வேண்டியதுதானே?

‘மரபணு மாற்றப்பட்ட பயிரை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என்று கறாராகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனவே ஐரோப்பிய யூனியன் நாடுகள். அங்கே போய் கடை திறக்க வேண்டியதுதானே... இந்த விஞ்ஞானிகள்...? அங்கு இவர்களின் பிரசாரத்தைச் செய்ய வேண்டியதுதானே...? முடியாது; அங்கெல்லாம் போனால், முட்டியைப் பெயர்த்துவிடுவார்கள். காரணம், அவர்களெல்லாம் உங்களுக்கு மேல் அறிவாளிகளாயிற்றே! அதனால்தான் இளிச்சவாய இந்தியாவுக்குள் எப்படியாவது திணிக்கப்பார்க்கிறீர்கள். எங்கள் ‘கைகளை’ பயன்படுத்தி, எங்கள் கண்களை குருடாக்கப் பார்க்கிறீர்கள்

இது ஒரு பக்கம் இருக்கட்டும்... மரபணு மாற்றுப் பயிர்களில் உட்காரும், தேனீ, வண்ணத்துப்பூச்சிகள்... அவற்றிலிருக்கும் மகரந்தங்களுடன் அக்கம், பக்கத்து வயல்களுக்கும் சென்று.. அனைத்து வயல்களுக்கும் பரவிவிடும் என்று இதை உருவாக்கி உலவவிட்டிருக்கும் மான்சான்டோ நிறுவனமே கூறிக் கொண்டிருக்கிறது. இப்படி பரவியதால், அக்கம் பக்கத்து வயல் விவசாயிகளிடம், ‘என் தொழில்நுட்பத்தை திருடிவிட்டாய்’ என்று சொல்லி இந்த நிறுவனம் நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வம்பிழுப்பது கூட நடந்திருக்கிறது. அப்படியென்றால், நாளைக்கு மரபணு மாற்றுப்பயிர் விளையும் காட்டுக்கு பக்கத்து காட்டு ராமசாமி, கோவிந்தசாமிகளின் நிலை என்னாவது.

ஒரு கட்டத்தில் இங்கே இருக்கும் அத்தனை விதைகளும் இந்த மரபணு மாற்று மலட்டு விதைகளாக மாற்றப்பட்டுவிட்டால், இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கும் புழு, பூச்சி, பறவைகள் எல்லாம்... உணவுக்காக எங்கே போவது. இதற்கெல்லாம் பதில் சொல்லுங்கள் நோபல் பரிசு எனும் உலகமகா பரிசைப் பெற்றிருக்கும் விஞ்ஞானி திருவாளர் ராமகிருஷ்ணன் அவர்களே!

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்று இந்த பூமி, இங்கே வாழும் அனைத்துயிர்களுக்கும் சொந்தம். பகுத்துண்டு வாழும்போதுதான், இயற்கை சமநிலை தொடரும் என்பதை இவ்வளவு அழகாக இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லிச் சென்றிருக்கிறானே எங்களின் பாட்டன் வள்ளுவன், அவன் எந்த நோபல் பரிசையும் வாங்கவில்லை. ஒருவேளை, அதனால்தான் இப்படி சொல்ல முடிந்ததோ... என்னவோ?!

விஞ்ஞானிகள் அல்ல... விவசாயிகள்!

‘காடுகளில் விளைந்து கிடைந்த தானிய வகைகளை தரம் பிரித்தது பயிரிட்டுதான் இந்த அளவுக்கு வளர்த்தெடுத்துள்ளோம்‘ என்றும் கூறியிருக்கிறார் இந்த விஞ்ஞானி ராமகிருஷ்ணன். அதையெல்லாம் செய்தது... மெத்தப்படித்த விஞ்ஞானிகள் கூட்டம் அல்ல. உங்கள் தாத்தன்... எங்கள் தாத்தன் என்று காலகாலமாக இங்கே வாழ்ந்த விவசாயிகள்தான். அவர்கள் ஒருபோதும் இயற்கைக்கு மாறாக எதையும் செய்யவில்லை. காடுகளில் கிடந்த பயிர்களைக் கண்டெடுத்து, நிலத்தை சீரமைத்து, அந்த இயற்கைக்கு எந்த இடைஞ்சலும் வராமல், பயிரிட்டு வளர்த்தெடுத்தார்கள். இதற்காக அரசாங்க சம்பளம், கம்பெனிகள் தரும்பணத்தில் வெளிநாட்டு உல்லாச சுற்றுலா... எதையும் அனுபவிக்கவில்லை. நாளைய தலைமுறை நஞ்சில்லா உணவை உண்ண வேண்டும்... பற்றாக்குறை இல்லாமல் விதைத்து, காலகாலத்துக்கும் உணவிட வேண்டும் என்கிற ஒற்றை நோக்கமே அவர்களிடம் இருந்தது. அப்படி அந்த விவசாயிகள் சேகரித்து வைத்த விதைகளுக்கு பெயரையும், நம்பரையும் கொடுக்கும் வேலையைத்தான் உங்களைப் போன்ற விஞ்ஞானிகள் செய்திருக்கிறீர்கள்.

இயற்கையை கெடுக்காமல்... இயற்கை வேளாண்மை மூலமே... இன்னும் மூன்று உலகத்துக்கு வயிறு நிறைய சோறு போடமுடியும். ஆனால், இத்தகைய இயற்கை வேளாண்மை மூலமாக பன்னாட்டு நிறுவனங்களுக்கு பணம் கிடைக்காது... விஞ்ஞானிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கமிஷன் கிடைக்காது. அதனால்தான்... இயற்கைக்கு வேட்டு வைக்கும் விஷயங்களை மட்டுமே பரிந்துரை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அதையேதான் இப்போதும் செய்திருக்கிறார்... வீரப்ப மொய்லி.

இது நாற்பது, ஐம்பது ஆண்டுகளாகவே இங்கே தொடரத்தான் செய்கிறது. ‘வேடிக்கை பார்ப்பதைத் தவிர நாமென்ன செய்வது? என்றேதான் இருக்கப் போகிறோமோ?!

- VIkatan

Tuesday, February 25, 2014

மீத்தேன் எமன்! பாலைவனமாகும் பரிதாப டெல்டா - 2

ந்தத் தெருவில், பாழடைந்த வீடு ஒன்று இருந்தது. அதை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்ட நினைத்தார், வீட்டுக்காரர். அஸ்திவாரம் போடுவதற்காக குழி தோண்டியபோது, செப்புக் குடம் ஒன்று கிடைத்தது. அதில் தங்கக் காசுகள், வெள்ளி ஆபரணங்கள் தகதகத்தன. இந்தத் தகவல், அந்தத் தெரு முழுவதும் பரவியது.
பக்கத்து வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த ஒகு. ராமகிருஷ்ணன்ருவன், 'இங்கேயும் கண்டிப்பாக புதையல் இருக்கும்... தோண்டிப் பார்க்கலாம்’ என்று நினைத்தான். இரவோடு இரவாக அந்த வீடு முழுக்க ஆழமான குழிகளைத் தோண்டி, கிடைத்ததைச் சுருட்டிக் கொண்டு ஒட்டம் எடுத்தான். மறுநாள் கனமழை... ஆங்காங்கே குழியெடுக்கப்பட்டதால் அந்த வீட்டின் சுவர்கள் ஆட்டம் கண்டு, ஒட்டுமொத்த வீடும் இடிந்து... அந்தக் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்தது.
மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், டெல்டாவின் நிலையும் இப்படித்தான் மாறும். எது எங்கு சாத்தியமோ, அதை அங்குதான் செய்ய வேண்டும். எதுவும் விளையாத பாலைவனப் பகுதிகளில் பெட்ரோல், கேஸ் எடுக்கிறார்கள் சரி. ஆனால், முப்போகம் விளையும் செழிப்பான விளைநிலங்களில், குடியிருப்புப் பகுதிகளில் எல்லாம், 'எண்ணெய் எடுக்கிறேன்...', 'மீத்தேன் எடுக்கிறேன்' எனச் செய்யப்படும் விஷப்பரீட்சைகளை மூடத்தனம் என்பதா? இல்லை, 'இதனால் நமக்கு எந்தப் பாதிப்பும் வந்துவிடாது. அழியப்போவது யாரோதானே...' என்ற எண்ணத்தில் நடைபோடும் ஆட்சியாளர்களின் அரக்கத்தனம் என்பதா?
நாளைக்கு எடுக்கப்பட இருக்கும் மீத்தேன் ஆபத்துக்கு ஒரு சோறு பதமே... கடந்த இருபது, ஆண்டுகளுக்கும் மேலாக இதே டெல்டா பகுதியில், 'பெட்ரோல் எடுக்கிறோம்' என்கிற பெயரில் மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. (இந்திய எண்ணெய் மற்றும் எரிவாயுக் கழகம்), நடத்திக் கொண்டிருக்கும் அழிவு வேலைகள்!
திருவாரூரில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது... வெள்ளக்குடி கிராமம். பாண்டவை ஆற்றின் கிளை வாய்க்கால்களால் பாசனம் பெறும் இந்த ஊர், ஒரு காலத்தில் மிகமிக செழிப்பான விவசாய பூமி. வளம் மிக்க வண்டல் மண் பூமி என்பதோடு, 10 அடி ஆழத்திலேயே நிலத்தடி நீர் தவழ, ஆண்டுக்கு மூன்று போகம் சாகுபடி செய்து, பொருளாதாரத்தில் தன்னிறைவோடு திகழ்ந்தனர், விவசாயிகள். 80-களின் இறுதி வரை நீடித்த இந்த நிலை... 90-களின் தொடக்கத்தில் தலைகீழாக மாறிப்போனது... பெருங்கொடுமை! ஆம்... ஓ.என்.ஜி.சி. நிறுவனம், அப்போதுதான் இங்கே அடியெடுத்து வைத்தது.
அதன் கோர முகத்தை, அப்போது உணராத டெல்டா வாழ் விவசாயிகள், விவசாயக் கூலிகள் என அனைவருமே... 'நம்ம ஊர்ல பெட்ரோல் எடுக்கப் போறாங்களாம்... துபாய், குவைத் மாதிரி நம்ம ஊரும் உலகம் முழுக்க ஃபேமஸாகி, பணக்கார ஊராயிடும். வழவழப்பான விசாலமான ரோடெல்லாம் வந்துடும். ஊர்ல நிறைய பேருக்கு வேலை கிடைச்சுடும்’ என்றெல்லாம் வெள்ளந்தியாகவே பேசிக் கொண்டிருந்தனர். மீடியாக்களிலும், 'காவிரி டெல்டாவில் பெட்ரோல் ஊற்று... ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான பெட்ரோல் பல ஆண்டுகளுக்குக் கிடைக்கும்... இதன் காரணமாக காவிரி டெல்டா முழுக்க தொழில்கள் பெருகும்' என்றே செய்திகள் பரப்பப்பட்டன!
அன்றைக்கு இதையெல்லாம் ஆச்சர்யமும்... பெருமையும் பொங்க உள்வாங்கிக் கொண்டிருந்தவர்கள்தான் வெள்ளக்குடி மக்கள். ஆனால், இன்று இந்தப் பசுமை பூமியின் நிலை... கொடுமையிலும் கொடுமை! நேரில் பார்த்த அதிர்ச்சியிலிருந்து நம்மால் விலகவே முடியவில்லை.
ஒரே வரியில் சொன்னால்... 'நவீன சாலைகளைக் கொண்ட நரகம்தான் வெள்ளக்குடி'.
''ஒவ்வொரு நாளும் செத்துப் பொழைச்சுக்கிட்டு இருக்கோம். ஓ.என்.ஜி.சி-யோட எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இங்கதான் இருக்கு. கேஸை தனியா பிரிக்கக்கூடிய சார்பு நிறுவனமான கெயில் இந்தியா நிறுவனமும் இங்க செயல்பட்டுக்கிட்டு இருக்கு. தேவைற்ற நச்சு வாயுக்கள் இருபத்தி நாலு மணிநேரமும் வெளியாகும். அதை அப்படியே எரிய விட்டுடுவாங்க. அதனால, ஆண்டு முழுக்க அணையா ஜோதியா அது எரிஞ்சிக்கிட்டே இருக்கு. இதனால வர்ற புகை, கரித்துகள் எல்லாம் விளைநிலங்கள்ல படியுது. நீர்நிலைகளும் விஷமாயிடுச்சு. எண்ணெய்க் கழிவுகளை திறந்தவெளியில வயல்கள்ல கொட்டி வெச்சுருக்காங்க. 60 அடி சுற்றளவு
20 அடி ஆழத்துக்கு கிணறுகளை அமைச்சி, அதுலயும் நச்சுக்கழிவுகளைக் கொட்டி வெச்சுருக்காங்க. இந்த கிணறுகளோட பக்கவாட்டுச் சுவர்கள் சிதிலமடைஞ்சு கிடக்கறதால, நச்சுக் கழிவுகள் மண்ணுல பரவி, ஊர் முழுக்க ஊடுருவியிடுச்சு.
மழை, வெள்ளக்காலங்கள்ல இந்த எண்ணெய்க் கழிவுகள் தண்ணீரோடு அடிச்சிக்கிட்டு வந்து, பரவலா எல்லா இடங்கள்லயும் வெளியில தேங்கிடுது. இதனால் இங்க உள்ள நிலங்கள்ல விளைச்சலே இல்லாம போயிடுச்சு. ஒருவேளை உயிர் புடிச்சி வந்தாலும், விதவிதமான நோய்கள் தாக்கி, பயிர்கள் செத்துடுது. அதனால, பெரும்பாலான நிலங்கள், தரிசாத்தான் கிடக்கு. விவசாயம் அழிஞ்சி போனதால, வெளியூர்களுக்கு கூலி வேலைக்குத்தான் நிறையபேர் போயிக்கிட்டு இருக்காங்க'' என்று சொல்லும் பரசுராமனின் வார்த்தைகள் முழுக்க... வருத்தம் இழையோடுகிறது!
''இந்த எண்ணெய் கம்பெனியால, நாங்க இழந்தது கொஞ்ச நஞ்சமல்ல...'' என பெருக்கெடுத்த கண்ணீரோடு, கதறி அழுத கமலா, ''மேய்ச்சலுக்குப் போற ஆடு, மாடுக கால்கள்ல, எண்ணெய்க் கழிவுகள் பட்டு, புண்ணாகி, இறந்துடுது. இந்தப் பகுதிகள்ல எப்பவும் எண்ணெய் வாடை, நச்சுப்புகை இதுங்களைத்தான் சுவாசிச்சுக்கிட்டு இருக்கோம். இதனால, ஏகப்பட்ட நோய்கள் எங்களுக்கு வருது. எப்பவுமே ஊருக்குள்ள வெப்பக் காத்துதான் வீசிட்டே இருக்கு. சின்னக் குழந்தைகள் எல்லாம் தாங்க முடியாம பலியாகுதுக.
குடிக்கக்கூட நல்ல தண்ணி கிடையாது. அடிபம்பு தண்ணியிலகூட எண்ணெய் வாடை அடிக்குது. இதையெல்லாம்விட பெரிய வேதனை... ஒ.என்.ஜி.சி கம்பெனிக்காரங்க, எங்க குடியிருப்புப் பகுதியை சுத்திலும் பெரிய காம்பவுண்ட் சுவர் கட்டிக்கிட்டு இருக்காங்க. 'ஏன் இதைக் கட்டறீங்க?'னு கேட்டதுக்கு, 'இங்க புதுசா ஃபேக்டரி வரப் போகுது'னு சொல்றாங்க. எதாவது அசம்பாவிதம் ஏற்பட்டா கூட நாங்க தப்பிச்சி ஓட முடியாது. இங்க இருந்து சில அடி தூரத்துலதான் எண்ணெய்-கேஸ் சேமிப்பு நிலையம் இருக்கு. 'எப்ப வேணும்னாலும் எது வேணுனாலும் நடக்கலாம்'னு இங்க உள்ள அதிகாரிகளே சொல்றாங்க'' என்று நடுங்கியவர்,  
''அப்பப்ப ஒ.என்.ஜி.சி-யோட மீட்புப் படை அதிகாரிகளும் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகளும் அவசர அவசரமா இங்க ஓடி வந்து... 'விஷ வாயு கசிஞ்சுடுச்சி... இந்த சேமிப்பு நிலையம் வெடிக்கப் போகுது. சிக்கீரம் கிளம்புங்க’னு பதற்றமா சொல்லுவாங்க. நாங்க பயந்து, உயிரைக் கையில புடிச்சிக்கிட்டு, குழந்தை, குட்டிகளைத் தூக்கிக்கிட்டு, கையில கிடைக்குற சாமான்களோடு வெளியில ஓடுவோம். ரொம்ப நேரம் கழிச்சி, எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமே இல்லாம, 'பயிற்சிக்காக ஒத்திகை பார்த்தோம்’னு அதிகாரிக சொல்லுவாங்க. இதுமாதிரி பல தடவை நடந்திருக்கு.
எங்க மேல அக்கறை இருக்கற மாதிரி பேசற சில அதிகாரிகள், 'இங்க எப்ப வேணும்னாலும் பெரிய அளவுல ஆபத்துகள் ஏற்பட லாம். இங்க இருந்து நீங்க வேற இடத்துக்கு போறது நல்லது’னு சொல்றாங்க. அதை எந்த அளவுக்கு நம்பறதுனு தெரியல.
இது எங்களோட பட்டா நிலம். காலகாலமா, தலைமுறை தலைமுறையா இங்கதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கோம். இப்ப எங்களோட வாழ்க்கை, நடைப்பிணமா நகர்ந்துக்கிட்டு இருக்கு'' என்று அழுதார், கமலா.
இங்குள்ள அத்தனை விவசாயிகளிடமும் இதுபோன்ற கதறல் கதைகளே நீக்கமற நிறைந்திருக்கின்றன.
- பாசக்கயிறு நீளும்...

- Vikatan

காலி இடங்களிலெல்லாம் காய்கறிகள்..! 'தண்ணியில்லா காட்டில்' தளிர்விடும் இயற்கை

தமிழ்நாட்டின் 'தண்ணியில்லா காடு' எனப் பெயர் பெற்ற ராமநாதபுரத்தை இனி, 'தமிழகத்தின் இஸ்ரேல்’ என அழைத்தாலும் மிகையில்லை. அந்தளவுக்கு புதிய விவசாயத் தொழில்நுட்பங்கள் இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. சாகுபடி பரப்பும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. வீடுகளைச் சுற்றியுள்ள காலி இடங்கள், மொட்டை மாடிகள், தென்னைக்கு ஊடுபயிர் என காய்கறி உற்பத்தி, இங்கே வேகமெடுத்திருக்கிறது!
எப்படி நிகழ்ந்தது இப்படி ஒரு அற்புதம்..?
100 இளைஞர்கள்..!
இவை அனைத்துக்கும் பின்னால் இருப்பது, மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரின் ஆர்வமும், முயற்சியும்தான். இயற்கை ஆர்வலரான நந்தகுமார், மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றதும் முள்காடுகளை அழித்து... இயற்கை விவசாயப் பரப்பை அதிகப்படுத்தும் திட்டங்களை வகுக்கத் தொடங்கினார். இயற்கை விவசாயம் பற்றிய விழிப்பு உணர்வை விவசாயிகளிடத்தில் ஏற்படுத்தி, அவர்களைத் தற்சார்பு விவசாயிகளாக மாற்றுவதற்காக, 'இயற்கை விவசாய ஆலோசகர்' ஏகாம்பரம் என்பவரை ஒப்பந்த ஊழியராகப் பணியமர்த்தினார். 'பசுமை விகடன்’ இதழில் இடம்பெறும் முன்னோடி விவசாயிகளை ஒவ்வொரு மாதமும் அழைத்து வந்து விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் மத்தியில் பேச வைத்தார். அதைத் தொடர்ந்து நூறு இளைஞர்களைத் தயார் செய்து, அவர்களுக்கு இயற்கை விவசாயப் பயிற்சி அளித்து, அவர் களைக் கொண்டு மாவட்டத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தார்.
பசுமை விகடனின் பயிற்சி!
இதற்காக, மாவட்ட நிர்வாகத்துடன் 'பசுமை விகடன்' இணைந்து, 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் தலைமையில் கடந்த ஆண்டு, இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் இரண்டாயிரம் ரூபாய் மதிப்பிலான காய்கறி விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இதில் பங்கேற்ற விவசாயிகள்தான், இன்று காய்கறி சாகுபடி செய்து, தினசரி வருமானம் பார்ப்பதோடு, மற்ற விவசாயிகளுக்கும் விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள், நந்தகுமார், சிவா சகோதரர்கள். மண்டபம் ஒன்றியம், வழுதூரைச் சேர்ந்த இந்த சகோதரர்களின் வீடு தேடிச் சென்றபோது, நம்மிடம் உற்சாகமாகப் பேசிய நந்தகுமார், ''ஒரு காலத்துல விவசாயத்து மேல வெறுப்பு வந்து, கடை கண்ணி வெச்சு பொழச்சுக்கலாம்னு போன ஜனங்க, இப்ப திரும்ப விவசாயத்துக்கே திரும்பி வர்றாங்க. கிட்டத்தட்ட எல்லா வீடுகள்லயும் காய்கறித் தோட்டம் இருக்கு. நம்மாழ்வார் அய்யா கொடுத்த பயிற்சியும், மாவட்ட நிர்வாகம் கொடுத்த விதையும்தான் இன்னிக்கு எங்களை சந்தோஷமா வெச்சிருக்கு'' என்றவர், வீட்டுக்குப் பின்புறம் இருந்த காய்கறித் தோட்டத்தைச் சுற்றிக்காட்டிக் கொண்டே பேசினார்.
ஜீரோ பட்ஜெட் பந்தல்!
''இது மொத்தம் ஒரு ஏக்கர் 60 சென்ட். இதுல ஒரு ஏக்கர்ல தென்னை மரங்கள் இருக்கு. இந்த 60 சென்ட் இடத்துல கொஞ்சம் மாங்கன்னுகளை நட்டிருக்கோம். மாவுக்கு ஊடுபயிரா காய்கறி விவசாயத்தை ஆரம்பிச்சோம். எங்க பக்கத்துல பனைமரங்களும், சீமைக்கருவேல் முள் செடிகளும் அதிகம். அதனால, முள் குச்சிகளை வெட்டி, பந்தல் போட்டு... கயிறுக்குப் பதிலா பனை நார்களைப் பயன்படுத்தியே பந்தல் விவசாயமும் செய்றோம். ஆடு, மாடுங்க உள்ள வராம இருக்கறதுக்காக, பனங்கைகளை வெச்சு வேலி போட்டுருக்கோம்.
இங்க கிடைக்கற பொருள்களையே பயன் படுத்திக்கறதால, செலவு அதிகமில்லை. பீர்க்கன், பாகல், குறும்புடலை, மஞ்சள்பூசணி(பரங்கிக்காய்), கத்திரி, மிளகாய், தக்காளினு போட்டிருக்கோம். முப்பது சென்ட்ல அகத்தி, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை, பாலக்கீரை, அரைக்கீரை, சிறுகீரை, வல்லாரைக்கீரைனு போட்டிருக்கோம். வேலியில 100 முருங்கை இருக்கு. கீரைகளுக்கு நடுவுல செடி அவரை, முள்ளங்கி இருக்கு. கொடுவள்ளிக்கீரைனு ஒண்ணு இருக்கு. இது வறட்சியையும் நல்லா தாங்கும். வீட்டுக்கு ஒரு செடி இருந்தா போதும். ஒரு தடவை இதை சாப்பிட்டுட்டா அப்பறம் விடவே மாட்டாங்க. அவ்வளவு சுவையா இருக்கும். இது, வயித்துப் புண், வாய்ப்புண் மாதிரியான நோய்களுக்கு மருந்துனும் சொல்றாங்க. இதையும் போட்டுருக்கோம்.
எங்களிடமே விதைப்பண்ணை!
ஒரு செடியில மகசூல் முடிஞ்சதும், பக்கத்துலயே அதே விதையை நட்டுடுவோம். அதனால சுழற்சி முறையில காய்கள் இருந்துக்கிட்டே இருக்கும். பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டி, தேமோர் கரைசல் இதுகளைத்தான் பதினைஞ்சு நாளைக்கு ஒரு முறை மாத்தி மாத்தி தெளிக்கிறோம். வேற எந்த பண்டுதமும் பாக்கறதில்லை. செடிகளுக்கு இடையில பள்ளம் பறிச்சு இலை, தழைக் கழிவுகளைப் போடுறதுல, அதெல்லாம் மட்கி உரமாகிடுது. எல்லாமே நாட்டு ரகம்கிறதால விதைகளை நாங்களே எடுத்து வெச்சுக்குவோம். அதனால விதைக்கு அலைய வேண்டியதில்லை'' என்று, நம்மை மலைக்க வைத்த நந்தகுமார், தொடர்ந்தார்.
மனம் நிறைவு..! பணம் வரவு!
''தோட்டத்துல இருந்து, தினமும் ஏதாவது மூணு வகை காய்கள் கிடைச்சுகிட்டே இருக்கு. தம்பி சிவா, ராமேஸ்வரத்துல கடை வெச்சுருக்கான். தினமும் காலையில பத்து மணிக்குதான் மதுரையில இருந்து ராமேஸ்வரத்துக்கு காய்கள் வரும். இப்போ, எங்க தோட்டத்து காய்களை அதிகாலையிலயே கடையில கொண்டு போய் வெச்சு வித்துடறோம். இப்பகூட காய்கறிகளோட தம்பி அங்கதான் போயிருக்கான். இப்படி விக்கிறதுல, தினமும் 500 ரூபாய் கணக்குல மாசத்துக்கு 15 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடுது. இதுக்காக நாங்க செலவு செஞ்சது மூவாயிரம் ரூபாய்தான். குடும்ப ஆளுங்களே பராமரிப்பு, அறுவடை வேலையைச் செஞ்சுக்கறாதால... எல்லாமே லாபம்தான்.
நம்மாழ்வாருக்கு நன்றி!
எங்ககிட்ட 3 மாடு, 40 ஆடு, 50 நாட்டுக்கோழிங்க இருக்கு. இதுகளோட கழிவுகளைத்தான் செடிகளுக்கு உரமா போடுறோம். இந்தத் தோட்டத்துல கிடைக்குற வருமானமே எங்க குடும்பத்துக்குப் போதுமானதா இருக்கு. நல்லது, கெட்டதுனு அவசர செலவுக்கு ஆடு, கோழிகளை வித்துக்குவோம். இப்போ நிறைய பேர், எங்களை மாதிரியே காய்கறி போட்டு, அன்னாடம் வருமானம் பாத்துக்கிட்டு, சந்தோஷமா இருக்காங்க. இதுக்காக கலெக்டர் அய்யா, நம்மாழ்வார் அய்யா, பசுமை விகடன் இவங்களுக்கெல்லாம்தான் நாங்க நன்றி சொல்லணும்'' என்று நெகிழ்வுடன் சொல்லி விடைகொடுத்தார், நந்தகுமார்.
நிறைவாக, மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரை சந்தித்தபோது, ''இந்த மாவட்டத்தோட காய்கறித் தேவையை, இங்க விளையற காய்கறிகளை வெச்சே ஈடுகட்டணும்ங்கிற எண்ணத்துலதான், காலி இடத்தில் எல்லாம் காய்கறிகள் விளைய வைக்கிற திட்டத்தைக் கொண்டு வந்தோம். விவசாயிகள், வேளாண்மைத்துறை அதிகாரிகள், களப்பணியாளர்களோட முயற்சியால இது நல்ல முறையில இயங்கிக்கிட்டு இருக்கு'' என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.
தொடர்புக்கு,
நந்தகுமார் (விவசாயி)
செல்போன்: 94865-75172
- Vikatan

வயல்வெளிப் பள்ளி - 2

ஒவ்வொரு பயிரைப் பற்றியும் அ முதல் ஃ வரையிலான அத்தனைக் கேள்விகளுக்கும் விடையாக மலர்கிறது, இந்தப் புதிய தொடர். கடந்த இதழில் முதல் பயிராக இடம் பிடித்த நெல், இந்த இதழிலும் தொடர்கிறது. நெல் பற்றிய சந்தேகங்களுக்குப் பதிலளிக்கிறார், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 'நெல் துறை’ தலைவர் மற்றும் பேராசிரியர் ராபின்.
''ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்று உற்பத்தி செய்ய எத்தனை கிலோ விதைநெல் தேவை?''
''ஒற்றை நெல் சாகுபடி முறைக்கு எந்த ரகமாக இருந்தாலும் 3 கிலோ முதல் 4 கிலோ அளவில் விதைநெல் தேவைப்படும்.  
வழக்கமான முறைக்கு... நீண்ட கால ரகங்கள் என்றால் 12 கிலோ; மத்திய கால ரகங்கள் என்றால் 16 கிலோ; குறுகிய கால ரகங்கள் என்றால் 24 கிலோ; உயர் விளைச்சல் ரகங்கள் என்றால் 8 கிலோ; பாரம்பரிய ரகம் என்றால் 30 கிலோ என்ற அளவில் விதைநெல் தேவைப்படும். இயந்திர நடவுமுறைக்கு... சன்ன ரகங்களாக இருந்தால், 12 கிலோவும், மோட்டா ரகமாக இருந்தால், 15 கிலோ அளவிலும் விதைநெல் தேவைப்படும்.''
'விதையின் முளைப்புத்திறனை எப்படித் தெரிந்து கொள்வது?'
'சான்றிதழ் பெற்ற விதைகளைப் பயன்படுத்தும்போது, முளைப்புத்திறன் பிரச்னைகள் வருவதில்லை. விதைநெல்லில் கை அளவு நெல்மணிகளை தண்ணீரில் ஓர் இரவு ஊற வைத்து, ஈரமான வெள்ளைத்துணியில் ஒரு நாள் முழுவதும் கட்டி வைத்திருந்தால், விதைகள் முளைப்பு எடுத்திருக்கும். கட்டி வைத்த விதையில் 70 முதல் 80 சதவிகிதம் விதைகள் முளைப்பு எடுத்திருந்தால்... தரமான விதைகள்.'
 
'தரமான நெல் விதையை எவ்வாறு தேர்வு செய்வது?'
'உப்புக்கரைசலைப் பயன்படுத்தி தரமான விதைகளைத் தேர்வு செய்யலாம். அதாவது, 15 லிட்டர் அளவுள்ள பிளாஸ்டிக் வாளியில், 10 லிட்டர் தண்ணீரை நிரப்பி புதிய கோழிமுட்டையை தண்ணீருக்குள் போடவேண்டும். முட்டை தண்ணீரில் மூழ்கிவிடும். பிறகு, கல் உப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் கரைத்துக் கொண்டே வந்தால், தண்ணீரின் அடர்த்தி அதிகரித்து, கோழிமுட்டை கொஞ்சம் கொஞ்சமாக மேல் நோக்கி வரும். கோழிமுட்டையின் மேற்பரப்பு உப்புக்கரைசலுக்கு மேல் தெரிந்த பிறகு, உப்புக் கரைப்பதை நிறுத்திவிட வேண்டும் (சுமார் ஒன்றரை கிலோ அளவுக்கு உப்பு தேவைப்படும்). பிறகு, இக்கரைசலில் 10 கிலோ விதைநெல்லைக் கொட்டினால், தரம் குறைவான விதைகள் நீரின் மேற்பகுதியில் மிதக்கும். அவற்றை அகற்றிவிட்டு, அடிப்பகுதியில் தங்கி இருக்கும் தரமான விதையைச் சேகரித்து... இரண்டு முதல் மூன்று முறை நல்ல தண்ணீரில் கழுவி உலர்த்திக் கொள்ள வேண்டும். இப்படி தேர்வு செய்து தரமான விதைகளை விதைத்தால்... அவற்றிலேயே முதல் ஏழு நாட்களுக்கு நாற்று வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் கிடைத்துவிடும்.''
'விதைநேர்த்தி செய்வதால் என்ன பயன்..?'
'விதைகள் மூலமாக பரவக்கூடிய பூச்சி, நோய் மற்றும் நூற்புழுக்களின் தாக்குதலைக் குறைப்பதற்கும், விதைகளின் முளைப்புத்திறனை அதிகப்படுத்தவும் விதைநேர்த்தி உதவும். விதைநேர்த்தி செய்தால், 'குலைநோய்’ தாக்காது.''
'விதைநேர்த்தி செய்வது எப்படி.?'
'ஒரு லிட்டர் தண்ணீரில், 10 கிராம் 'சூடோமோனஸ் ஃபுளோரசன்ஸ்’ நுண்ணுயிரைக் கலந்து... அதில், ஒரு கிலோ விதைநெல்லைக் கொட்டி ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். மறுநாள் விதைநெல்லை சணல் சாக்கில் இட்டுக் கட்டி, 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைத்திருந்து, முளைகட்ட வைத்து (மூன்றாம் கொம்பு) விதைக்க வேண்டும். விதைநெல்லின் அளவுக்கேற்ப தண்ணீரின் அளவையும் நுண்ணுயிரியின் அளவையும் கூட்டிக்கொள்ளலாம்.
இன்னொரு முறையிலும் விதைநேர்த்தி செய்யலாம். 50 லிட்டர் தண்ணீரில் தலா 250 கிராம் 'அசோஸ்பைரில்லம்’, 'பாஸ்போ -பாக்டீரியா’ ஆகிய நுண்ணுயிர்களைக் கலந்து (அசோபாஸ் கலவையாக இருந்தால் 500 கிராம்)... ஒரு ஏக்கருக்குத் தேவையான அளவு விதைநெல்லை இக்கரைசலில் இட்டு, ஓர் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். பிறகு, சணல் சாக்கில் கட்டி, 24 மணி நேரத்துக்கு இருட்டில் வைத்திருந்து, முளைகட்ட வைத்து விதைக்க வேண்டும்.
இயற்கை விவசாய முறையில், 5 லிட்டர் தண்ணீருக்கு 50 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து, இதே முறையில் விதைநேர்த்தி செய்கிறார்கள். இதனுடன் நுண்ணுயிரிகளையும் கலந்தும் விதைநேர்த்தி செய்யலாம்.'
'நெல் சாகுபடியில் எத்தனை விதமான நாற்றங்கால் முறைகள் உள்ளன?'
'சேற்று நாற்றங்கால், மேட்டுப்பாத்தி நாற்றங்கால், புழுதி நாற்றங்கால், ஒற்றை நாற்று நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால், இயந்திர நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால் போன்ற முறைகள் பயன்பாட்டில் உள்ளன.'
'சேற்று நாற்றங்கால் தயாரிப்பது எப்படி?'
'நாற்றங்கால் அமைக்க... தண்ணீர் வசதியும், வடிகால் வசதியும் இருக்கும் வளமான நிலத்தைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். ஒட்டு ரகமாக இருந்தால், ஒரு ஏக்கருக்கு 8 சென்ட் நிலமும், பாரம்பரிய ரகத்துக்கு10 சென்ட் நிலமும் தேவை. களி மற்றும் மணல் கலந்த நிலமாக இருந்தால், சிறப்பாக இருக்கும். முதலில் இரண்டு சால் புழுதி உழவு செய்து, 400 கிலோ தொழுவுரத்தைக் கொட்டிக் கலைத்துவிட வேண்டும். பிறகு, தண்ணீர் கட்டி இரண்டு நாட்கள் வைத்திருந்து, இரண்டு சால் சேற்று உழவு செய்து சமப்படுத்திக் கொள்ள வேண்டும். அதிகப் படியான தண்ணீரை வடித்து விடுவதற்காக நாற்றங்காலின் மையப்பகுதியில் 10 அடி இடைவெளியிலும், நாற்றங்காலின் நான்கு பக்கமும் அரை அடி அகலத்துக்கு வடிகால் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.
50 லிட்டர் தண்ணீரில், 2 லிட்டர் பஞ்சகவ்யா, 200 கிராம் சூடோமோனஸ் கலவையைக் கலந்து நாற்றங்காலில் ஊற்றி... மறுநாள், இரண்டு அங்குல உயரத்துக்கு தண்ணீர் கட்டி தேவையான அளவு விதைநேர்த்தி செய்த மூன்றாம் கொம்பு விதையைப் பாவ வேண்டும். விதைத்த 12 மணி நேரத்துக்குப் பிறகு, தண்ணீரை வடிக்க வேண்டும். தொடர்ந்து, ஒரு வாரத்துக்கு தினமும் ஒரு மணி நேரம் தண்ணீர் கட்டி, வடிக்க வேண்டும். அதற்குப் பிறகு, இரண்டு அங்குல உயரத்துக்கு நிரந்தரமாக தண்ணீரை நிறுத்த வேண்டும். சேறு இறுக்கமாகும் அளவுக்கு காய விடக் கூடாது.
ஏழு நாட்களுக்குப் பிறகு, நாற்று நல்ல பச்சை கொடுத்து வளரும். 10 முதல் 12 நாட்களில் களைகளை நீக்க வேண்டும். போதுமான வளர்ச்சி இல்லை என்றால், ஒரு சென்ட் நிலத்துக்கு ஒரு லிட்டர் அமுதக்கரைசல் என்ற கணக்கில், தண்ணீரில் கலந்து பாசனம் செய்தால், வளர்ச்சி அதிகரிக்கும். களிமண் பாங்கான பகுதிகளில் நாற்றின் வேர் பகுதி அறுந்து விடாமல் இருக்க...
10 கிலோ ஜிப்சத்தை, நாற்றுப் பறிப்பதற்கு முதல்நாள் தூவி விட வேண்டும். 135 நாட்களுக்கு குறைவான குறுகிய மற்றும் மத்திய கால நெல் ரகங்களின் நாற்றுகளை 20 முதல் 25 நாட்களிலும், நீண்ட கால நெல் ரகங்களின் நாற்றுகளை 30 நாட்களிலும் பறித்து நடவு செய்ய வேண்டும்.'
மேட்டுப்பாத்தி நாற்றங்கால், புழுதி நாற்றங்கால், ஒற்றை நாற்று நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால், இயந்திர நடவுக்கான பிளாஸ்டிக் தட்டு நாற்றங்கால் போன்றவற்றைத் தொடர்ந்து பார்ப்போம்...
- படிப்போம்...

- Vikatan

பூவே... பூவே... மாம்பூவே! பூக்களைப் பாதுகாக்க பலே யோசனைகள்!

து மாமரங்களின் சூல் காலம். அதாவது, மா மரங்கள் பூவெடுக்கும் பருவம். பெண்ணின் கர்ப்ப காலம் போன்றது, மரங்களில் பூ பூக்கும் பருவம். பூக்கள் உதிர்ந்து விட்டால், மகசூல் கிடைக்காது என்பதால், மிகமிக கவனமாக கையாள வேண்டிய பருவம் இது. இயற்கை முறையில் மாமரங்களில் பூக்கள் உதிராமல் பராமரிக்கும் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள சேலம், அக்கரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருநாவுக்கரசை சந்தித்தோம்.
''வழக்கறிஞரா இருந்தாலும், அடிப் படையில நான் விவசாயி. எங்க குடும்பமே விவசாயத்து மேல ஈடுபாடு உள்ள குடும்பம். மண்ணைக் கெடுத்து, மனுசனையும் கெடுக்கும் ரசாயனத்தைப் போடாம, இயற்கை முறையிலதான் விவசாயம் செய்றோம். ரெண்டு ஏக்கர்ல இமாம்பசந்த், ரெண்டு ஏக்கர்ல சேலம்-பெங்களூரா ரக மரங்கள் இருக்கு. எல்லாத்தும் சொட்டு நீர் போட்டிருக்கேன்'' என முன்னுரை கொடுத்த திருநாவுக்கரசு தொடர்ந்தார்.
''பொதுவா, நமக்கான மகசூலைத் தீர்மானிக்கறது பூக்கள்தான். ஒரு மரம் பூத்திருக்கும்போது, கர்ப்பிணிப் பெண்ணைப் பாதுகாக்குற மாதிரி பாத்துக்கணும். உடம்பு ஆரோக்கியமாஇருந்தாத்தானே ஆரோக்கியமான குழந்தையைப் பெத்தெடுக்க முடியும். அதுமாதிரி, மரங்கள் ஆரோக்கியமா இருந்தாத்தான் அதிக பூக்கள் பூக்கும். பூத்தப் பூக்களும் உதிராம இருக்கும். அதனால, பூவெடுக்குறதுக்கு முன்னமே மரத்தைத் தயார் செஞ்சுடணும். பூக்குறதுக்கு மூணு மாசத்துக்கு முன்ன, உழவு போட்டு, மரத்தோட இலை-தழைகளையும், கால்நடைக் கழிவுகளையும் அடியுரமா போடணும். அப்பத்தான் மரத்துக்குத் தேவையான சத்துக் கள் கிடைக்கும். மரத்துல சத்து இல்லன்னா... பூ உதிர்ந்திடும்.
பூவெடுத்த பிறகு, மூடுபனி, காத்து, மழை அதிகமா இருந்தா பூக்கள் கொட்டிடும். இந்த இயற்கைச் சீற்றத்தை நம்மால தடுத்து நிறுத்த முடியாது. அதேநேரத்துல, பூத்த எல்லா பூக்களும் காயா மாறுனா, மரமும் தாங்காது. ஆயிரம் ஆண் பூக்களுக்கு, ஒண்ணு, ரெண்டு பெண் பூக்கள் என்ற கணக்குலதான் மா மரங்கள்ல பூ இருக்கும். வண்டுகளும், பூச்சிகளும் பூக்கள்ல மாறிமாறி உக்காரும்போது, ஆண் பூக்கள்ல இருக்கற மகரந்தத்தூள்கள், பெண் பூக்களோட சூல் பையில விழுந்து, பிஞ்சு உருவாகும். அந்த சமயத்துல பஞ்சகவ்யா, அரப்பு-மோர் கரைசல்களை ரெண்டு மூணு முறை, நல்லா பூக்கள் நனையிற மாதிரி தெளிக்கணும். இப்படி தெளிக்கிறப்போ, பெண் பூக்கள் வலுவானதா மாறும். பூச்சிகளும் வராது. மரத்துல பூ இருக்கும்போது வேர்கள்ல தண்ணி தேங்க விடக்கூடாது. அதே நேரத்துல காய்ஞ்சும் போயிடாம, ஈரப்பதம் இருக்கற மாதிரி பாத்துக்கிடணும். பாசனம் செய்றப்போ, அமுதக்கரைசலை பாசனத் தண்ணியில கலந்து விடணும்''
என்று சொன்ன திருநாவுக்கரசு,
''இதெல்லாமே எளிமையான வழிமுறைகள்தான். எல்லாத்தையும் முறையா செஞ்சாலே, ஏக்கருக்கு ஒண்ணரை டன்ல இருந்து ரெண்டு டன் காய் எடுக்கலாம்'' என்றார் தெம்பாக!.

- Vikatan article

என்ன சொல்கிறது நிதிநிலை அறிக்கை? தமிழக பட்ஜெட்... ஒரு பார்வை

ரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து... மத்திய, மாநில அரசுகள் தாராளமான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளன. வழக்கம் போல, திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் பணம் என்னவானது... திட்டங்கள் என்னவாயின... என்பதைப் பற்றியெல்லாம் தெரிந்துகொள்வதற்கு இங்கே வாய்ப்பே இல்லை. ஆனால், மறுபடி மறுபடி திட்டங்களைத் தீட்டி, பணத்தை அள்ளிவிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சரி, எவ்வளவு பணம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதையாவது தெரிந்து கொள்வோமே!
2014-15-ம் ஆண்டுக்கான, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை பிப்ரவரி 13-ம் தேதி நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட சபையில் தாக்கல் செய்தார். பொதுத்துறை நிறுவனங்களுக்குத்தான் இந்த நிதியாண்டில் அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு கடந்த ஆண்டை விட 171 கோடி ரூபாய் அதிகம் சேர்த்து, மொத்தம் 5 ஆயிரத்து 360 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்மை, கால்நடை, பால், நீர்வளம் ஆகிய துறைகளுக்கு நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றிய விவரங்களின் சாராம்சங்கள், இங்கே இடம் பெறுகின்றன.
பருத்திக்கு  50 கோடி!
கூட்டுறவு அமைப்புகள் மூலம் பயிர்க்கடன் வழங்க, 5 ஆயிரம் கோடி ரூபாய், வேளாண்மை இயந்திரமயமாக்கலுக்கு 100 கோடி ரூபாய், 22 மாவட்டங்களில் தேசிய தோட்டக்கலைப் பயிர்களை ஊக்கப்படுத்த 115 கோடி ரூபாய், தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நெல், கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடிக்கு 323 கோடி ரூபாய், பயிர் காப்பீடு திட்டத்துக்கு 242.54 கோடி ரூபாய், நுண்ணுயிர்ப் பாசனத்தை மேம்படுத்த 115 கோடி ரூபாய் என நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. திருந்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும். 'பருத்தி சாகுபடி இயக்கம்’ என்ற பெயரில் பெருந்திட்டம் ஒன்று தொடங்கப்படும். அதன்கீழ் பருத்தி சாகுபடியை மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கப்படும். கடந்த நிதியாண்டில் 8.9 லட்சம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கப்பட்டுள்ளது. துல்லியப் பண்ணைத்திட்டம் 11 ஆயிரம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும். நடவு துவரை 1.3 லட்சம் ஏக்கருக்கு விரிவுபடுத்தப்படும். ஆலைகளுடன் சேர்ந்து கரும்பு சாகுபடி பரப்பு 12 ஆயிரத்து 500 ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும்.
கோழி வளர்ப்புக்கு 25 கோடி!
100 கால்நடைத் துணை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும். விலையில்லா கறவைமாடு வழங்கும் திட்டத்தில் 12 ஆயிரம் பயனாளிகளுக்கு 43.65 கோடி ரூபாய் செலவில், கறவை மாடுகள் வழங்கப்படும். விலையில்லா வெள்ளாடு, செம்மறியாடு வழங்கும் திட்டத்தில் ஒன்றரை லட்சம் பயனாளிகளுக்கு 118.25 கோடி செலவில் ஆடுகள் வழங்கப்படும். பால்பண்ணைகளை ஊக்கப்படுத்த 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கோழி வளர்ப்புக்கு 25 கோடி ரூபாயும், பாசன வசதிக்காக 3,669.79 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நதிகள் இணைப்புக்கு 38 கோடி!
மாநில நதிகள் இணைப்புத் திட்டத்துக்கு 38 கோடி ரூபாய்; அணைகள் புனரமைப்புப் பணிக்கு 329.65 கோடி ரூபாய்; பாரம்பரிய நீர்நிலைகளைக் காக்க 86.28 கோடி; பசுமை மின்சக்தி வழித்தடங்கள் அமைக்க 1,593 கோடி; கூவம் நதியை முழுமையாக சீரமைக்க 3833.62 கோடி; உணவு மானியத்துக்கு 5,300 கோடி ரூபாய் என ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
வேளாண்மைக்கு 8 லட்சம் கோடி ரூபாய் கடன்!
மத்திய அரசின் இடைக்கால நிதி நிலை அறிக்கையை பிப்ரவரி 17-ம் தேதி நிதியமைச்சர் ப. சிதம்பரம், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில், ''கிடங்குகளில் சேமிக்கப்படும் அரிசிக்கு சமீபத்தில் விதிக்கப்பட்ட சேவை வரி ரத்து செய்யப்பட்டிருக்கிறது. நாட்டின் உணவு-தானிய உற்பத்தி 263 மில்லியன் டன் என்று கணக்கிடப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டுக்கு வேளாண்மைக் கடன் 8 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்படும். தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின்படி உணவு மானியத்துக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. உணவு, உரம், எரிபொருளுக்கான மானியமாக 2 லட்சத்து 46 ஆயிரத்து 397 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 2014-15ம் ஆண்டு வேளாண் பொருட்களின் ஏற்றுமதி 45 பில்லியனாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் மொத்த வேளாண் உற்பத்தி 4.6 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றெல்லாம் கூறியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர்!

- Vikatan

என்னவென்று சொல்வது?

அனைவருக்கும் பசுமை வணக்கம்!
''புதிய ரக பருத்தி, காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுவதால் எதிர்காலத்தில் களைக்கொல்லிகளுக்கும், பூஞ்சைக் கொல்லிகளுக்கும் தேவைப்பாடு அதிகமாக இருக்கும். இதனால் பூச்சிமருந்து தயாரிப்புத் துறை வளர்ச்சி அடையும்...''
-இப்படி ஒரு நம்பிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைப்பான 'அசோசெம்' (ASSOCHAM-Associated Chambers of Commerce and Industry of India)!
இந்த 'நம்பிக்கை’ அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னால், பேருண்மை ஒன்று மறைந்துள்ளது. 'யெஸ் பேங்க்' என்ற வெளிநாட்டு வங்கியும், 'அசோசெம்' அமைப்பும் நாடு முழுக்க சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தின. இதன் மூலமாக, 'சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷங்களைவிட, இந்தியாவில் இரண்டு சதவிகிதம் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது' என்கிற உண்மையைக் கண்டறிந்துள்ளார்கள்.
இப்படி பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறைய ஆரம்பித்திருப்பதன் காரணமே.... இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்பு உணர்வு இங்கே பெருக ஆரம்பித்திருப்பதுதான். ஆனால், 'இந்த இரண்டு சதவிகித விழிப்பு உணர்வு... நாளைக்கு நான்காகும்... எட்டாகும்.... பதினாறாகும்... இப்படியே போனால், கம்பெனிகள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லிகளை யாரிடம் போய் விற்பனை செய்வது?' என்கிற பதைபதைப்பு வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது 'அசோசெம்' அறிக்கை!
உலகம் முழுக்கவே, 'பூச்சிக்கொல்லி விஷத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதைக் குறையுங்கள்' என்கிற பிரசாரம் தீவிரமாக நடந்துவருகிறது. காரணம்... அவற்றின் தாறுமாறான பயன்பாட்டின் எதிர்விளைவாக, மக்களுக்கும் சூழலுக்கும் ஏற்பட்டிருக்கும் கேடுகள்தான்!
'நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் எவ்வளவு உள்ளது. பொருளாதாரச் சேத நிலை எப்படி இருக்கிறது... என்பதையெல்லாம் பார்த்த பிறகே, பூச்சிக்கொல்லி தெளிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்’ என்று வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளேகூட சொல்லி வருகிறார்கள். என்றாலும், தும்பி, சிலந்தி, தேனீ... என நன்மை செய்யும் பூச்சிகளைக் கண்டால்கூட பதறியடித்து, பூச்சிக்கொல்லி தெளிக்கும் நிலைதான் இங்கே நீடிக்கிறது.
இந்த நிலையில், இரண்டு சதவிகித பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறைந்ததற்கே, பதைபதைப்போரை என்னவென்று சொல்வது?!

- Vikatan

அமோக விளைச்சல்... 5 லட்சம் பரிசு...

அமோக விளைச்சல்... 5 லட்சம் பரிசு...
மாநில விருது பெற்ற வெற்றி விவசாயி

 ல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் குடியரசு தின நாளில் விருது வழங்கி கௌரவித்து வருகிறது, தமிழக அரசு. அந்த வகையில், கடந்த ஜனவரி 26-ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடியில் மாநில அளவில் அதிக விளைச்சல் எடுத்த ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி என். பரமேஸ்வரனுக்கு 5 லட்ச ரூபாய் பரிசும், பதக்கமும் வழங்கி கௌரவப் படுத்தியுள்ளார், முதல்வர் ஜெயலலிதா.
விருது பெற்ற மகிழ்ச்சியில் இருந்தவரைச் சந்தித்தபோது, ''இந்த விருது முறைப்படி என் மனைவிக்குத்தான் போய்ச் சேரணும். அவுங்க கொடுத்த ஊக்கமும், உழைப்பும்தான் விருது வாங்கிக் கொடுத்திருக்கு'' என்று பெருமையோடு மனைவியை அறிமுகப்படுத்தி வைத்த பரமேஸ்வரன், தொடர்ந்தார்.  
கொட்டிக் கொடுக்கும் கோடை உழவு!
''ஒரு போகம் முடிஞ்சவுடனேயே கோடையில ரெண்டு உழவு ஓட்டி நிலத்தை நல்லா ஆறப்போடணும். அப்பதான் களைகள் வீரியம் இல்லாம போகும். மழை சரியா இல்லாததால் போன வருஷம் கோடை உழவு ஓட்டி ஆறப் போட்டேன். கிட்டத் தட்ட ஒரு வருஷம் நிலம் சும்மா கிடந்துச்சு. ஏழு ஏக்கருக்கும் சேர்த்து பத்து டிராக்டர் தொழுவுரத்தைக் கொட்டி இறைச்சு, உழுது நடவு செஞ்சேன். சம்பா மசூரி-5204 ரக நெல்லைத்தான் சாகுபடி செஞ்சுருந்தேன். விதை நெல்லை அக்ரி ஆபீஸ்லதான் வாங்கி னேன். சரியான நேரத்துல களையெடுக்குறது, சரியான அளவுல தண்ணி பாய்ச்சுறது, சரியான நேரத்துல தேவையான அளவு உரம் கொடுக்குற துனு பராமரிச்சதுலதான் இந்த விளைச்சல் எடுக்க முடிஞ்சது. நான் விதைச்ச நேரத்துல சீதோஷ்ண நிலையும் நல்லா இருந்ததால பூச்சித் தாக்குதலும் இல்லை. அப்பப்போ வேளாண் அதிகாரிகளும் வந்து ஊக்கம் கொடுத்தாங்க.
அறுவடை சமயத்துல, வேளாண் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், ரெண்டு வெளியூர் விவசாயிகள் வந்திருந்தாங்க. அவங்க முன்னாடி அறுவடை செஞ்சு 'ரேண்டம்’ முறை யில கணக்கீடு செஞ்சாங்க. ஒற்றை நாற்று நடவு முறையில ஏழு ஏக்கர்ல நான் நெல் நடவு செய்திருந்தாலும், 50 சென்ட் நிலத்துக்கான மகசூலை வெச்சுத்தான் கணக்குப் போட்டாங்க. அந்த வகையில, ஒரு ஏக்கர்ல நான் எடுத்த விளைச்சல் 6 ஆயிரத்து 110 கிலோ. இதை வெச்சுதான்... அதிக விளைச்சல் எடுத்ததுக்கான விருதை எனக்குக் கொடுத்திருக்காங்க. இந்த விருது ஒட்டுமொத்த விவசாயி களுக்கும் கிடைச்சதா நினைச்சு சந்தோஷப்படுறேன்'' என்றார், மகிழ்ச்சியாக.
விருதில் இருக்கு வில்லங்கம்!
மாநில அளவில் விருது வழங்கு வதில் உள்ள சில குறைகளை நம்மிடம் சுட்டிக்காட்டினர், சில முன்னோடி விவசாயிகள். அவை இங்கே இடம்பிடிக் கின்றன.
'அறச்சலூர்’ செல்வம் முன்னோடி இயற்கை விவசாயி: 'வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களால் கண்டுபிடிக்கப் பட்ட உயர் விளைச்சல் நெல் ரகங்களைப் பயிர் செய்யும் விவசாயிகளுக்குள்தான் போட்டி வைக்கப் படுகிறது. பவானி, பொன்னி உள்ளிட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாட்டு நெல் ரகங்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை பயிர் செய்யும் விவசாயிகளை வேளாண்துறை கண்டு கொள்வதில்லை. அதேபோல், முழுக்க முழுக்க வளம் குன்றா வேளாண்மையை மேற்கொண்டுவரும் பாரம்பரிய சாகுபடி முறை நெல் விவசாயி களையும் ஏறெடுத்துப் பார்ப்பதில்லை. வருங்காலங்களில் இது மாற்றப்பட வேண்டும்.''
சுப்பு, தமிழக விவசாயிகள் சங்க செயலாளர்: 'இது போன்ற போட்டிகளை அனைத்து நெல் விவசாயிகளுக்கும் தெரியப்படுத்துவதில்லை. குறிப்பிட்ட சில விவசாயி களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படுகிறது. விருது பெற்ற விவ சாயி, பயிர் செய்துள்ள 7 ஏக்கர் விளைச் சலையும் கணக்கில் எடுக்காமல், 'ரேண்டம்’ முறையில் 50 சென்ட் மட்டுமே கணக்கிடப்படுவது சரியாக இருக்காது. தவிர, வேளாண்துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இல்லை. விருதுபெற்ற விவசாயிகளின் வயலுக்கு அந்த மாவட்டத்தில் உள்ள மற்ற முன்னோடி விவசாயிகளை அழைத்துப்போய் பார்வையிட ஏற்பாடுகள் செய்யவேண்டும். சம்பந்தப்பட்ட விவசாயி மேற்கொண்ட தொழில்நுட்பங்களைக் கேட்டறிய வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போதுதான் மற்ற விவசாயி களுக்கு உபயோகமாக இருக்கும். வரும் ஆண்டுகளில், கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட முக்கிய பயிர்களையும் விளைச்சல் போட்டியில் சேர்க்க வேண்டும்.'
இது குறித்து,   தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் நெல் மட்டும் சிறுதானியப் பிரிவு துணை இயக்குநர் சந்திரசேகரனிடம் கேட்டபோது, ''தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறையின் இந்த மாநில விருது தொழில் நுட்பத்துக்கானது. திருந்திய நெல் சாகுபடியை, அனைத்து நெல் விவசாயிகளிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்கிற உயரிய நோக்கில், தமிழக முதல்வரால் வழங்கப்பட்டுள்ளது. மற்ற பயிர்களுக்கான பரிசுகள் மாவட்ட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது'' என்பதோடு முடித்துக்கொண்டார்.
தொடர்புக்கு, என். பரமேஸ்வரன், செல்போன்: 99941-39988.

- Vikatan

Friday, February 21, 2014

நீங்கள் கேட்டவை :''நல்ல விளைச்சல் தரும் நிலக்கடலை ரகம் எது?. அந்த ரக விதை எங்கு கிடைக்கும்?''

''நல்ல விளைச்சல் தரும் நிலக்கடலை ரகம் எது?. அந்த ரக விதை எங்கு கிடைக்கும்?''
- செல்வராசு, நாமக்கல்.
திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர், வைத்தியநாதன் பதில் சொல்கிறார்.
''நிலக்கடலை சாகுபடியில், நல்ல விளைச்சல் எடுக்க வேண்டுமானால், அந்தந்தப் பகுதிக்கு ஏற்ற ரகங்களைத் தேர்வு செய்து விதைக்க வேண்டும். நாமக்கல் பகுதியைப் பொறுத்தவரை திண்டிவனம்-13, திண்டிவனம்-7 விருத்தாசலம்-2, விருத்தாசலம்-3 ஆகிய ரகங்கள் ஏற்றவை. திண்டிவனம்-13 ரகத்தில் சிகப்பு வண்ணப் பருப்பு இருக்கும். இது அதிக எண்ணெய் சத்து கொண்டது. திண்டிவனம்-7 ரகம், விவசாயிகள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இது, மானாவாரி, இறவை என இரண்டு சாகுபடிக்கும் ஏற்றது. விருத்தாசலம்-2 ரகம், பெரிய பருப்பு கொண்டது. ஏற்றுமதிக்கு ஏற்ற ரகமிது. விருத்தாசலம்-6 ரகம், சிறிய பருப்பாக இருந்தாலும், எண்ணெய் சத்து அதிகம் கொண்டது. சாப்பிடவும் ஏற்றது. எங்கள் ஆராய்ச்சி நிலையத்திலும், விருத்தாசலம் மண்டல ஆராய்ச்சி நிலையத்திலும் இந்த ரக விதைகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெறலாம்.''
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம், விழுப்புரம்-604025.  தொலைபேசி: 04147-250293.
பேராசிரியர் மற்றும் தலைவர், மண்டல ஆராய்ச்சி நிலையம், விருத்தாசலம், கடலூர்-606001. தொலைபேசி: 04143-238231.
''எங்கள் வீட்டில் இருக்கும் பலா மரம், 20 வயதாகியும் சரியாகக் காய்ப்பதில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அடிமரம் முழுவதையும் கொத்தி விட்டபோது, அந்த ஆண்டு காய்த்தது. அதன் பிறகு காய்க்கவில்லை. என்ன காரணம்?''
-கே.வி. ரங்கராஜன், ராஜபாளையம்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் உள்ள காய்கறித்துறை விஞ்ஞானி ஜி. ராஜலிங்கம் பதில் சொல்கிறார்.
''நீண்டகாலமாக காய்ப்புத்தன்மை இல்லாமல் உள்ள மா, பலா, முருங்கை... போன்ற மரங்களில், ஆணி அடிப்பது, கிளைகளை வெட்டி விடுவது, மரத்தைக் குலுக்கி விடுவது... போன்ற செயல்களைச் செய்வதுண்டு. இப்படி மரத்துக்குச் செயற்கையாக ஓர் அழுத்தம் கொடுக்கப்படும்போது, சில மரங்கள் காய்த்துக் குலுங்குவதும் உண்டு. ஆனால், இந்தச் செயல்முறைக்கு விஞ்ஞான ரீதியான பின்புலம் கிடையாது. ஆகையால், காய்ப்புத் தன்மை இல்லாத மரத்தை நேரில் பார்த்த பிறகுதான் முழுமையான ஆலோசனை வழங்க முடியும். காரணம், சில மரங்கள் சத்துப்பற்றாக்குறை, போதிய சூரிய ஒளி கிடைக்காமை... போன்ற காரணங்களால்கூட பலன் கொடுக்காமல் இருக்கலாம். எனவே, உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்ரீவில்லிபுத்தூர், வேளாண் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொள்ளுங்கள். அங்குள்ள தோட்டக்கலைத்துறை விஞ்ஞானி, உங்கள் மரத்தைப் பார்த்து விட்டு உரிய தொழில்நுட்ப ஆலோசனையை வழங்குவார்.''
தொடர்புக்கு, பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், பருத்தி ஆராய்ச்சி நிலையம், ஸ்ரீவில்லிப்புத்தூர், விருதுநகர்- 626125. தொலைபேசி: 04563-260736.
''இயற்கை விளைபொருள் அங்காடி நடத்தி வருகிறோம். எங்கள் அங்காடியில், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, 'நான் ஓவன்’ பைகளைப் பயன்படுத்துமாறு நண்பர்கள் சொல்கிறார்கள். இது சரியா? 'நான் ஓவன்' பைகள் சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் உருவாக்கப்படுகின்றனவா?''
- எஸ். சுகுணா, வேலூர்.
சென்னையைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரும், 'ரீ ஸ்டோர்’ இயற்கை அங்காடி நடத்தி வருபவருமான அனந்து பதில் சொல்கிறார்.
''பிளாஸ்டிக் பைகளைவிட, இந்த நான் ஓவன் பைகள் ஆபத்தானவை. இது தெரியாததால்தான், திருமணத் தாம்பூலம்கூட இப்பைகளில் வழங்கப்படுகின்றன. இந்த வகை பைகள், பெரும்பாலும் சீனாவில் இருந்துதான் இறக்குமதி ஆகின்றன. பெட்ரோலிய மூலப்பொருட்களில் இருந்துதான், நான் ஓவன் பைகள் தயாரிக்கிறார்கள். இவை, மட்கும் தன்மை கொண்டவை என்று சொல்லப்பட்டாலும், மட்கும் தன்மை அவற்றுக்கு கிடையாது என்பதுதான் உண்மை. இவற்றைத் தயாரிக்க, ஏராளமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதனால், இப்பைகளில் அடைக்கப்படும் உணவுப் பொருட்களில் ரசாயன எச்சங்கள் கலக்க வாய்ப்புகள் உண்டு.
தற்போது, 'மட்கும் தன்மை கொண்ட பிளாஸ்டிக் பைகள்' என்ற பெயரில் வரும் பைகளின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. உண்மையில் இவை, இலை-தழை போல மட்கி மண்ணோடு மண்ணாக மாறுவதில்லை. கண்ணுக்குத் தெரியாத அளவில் நுண்துகள்களாக உதிர்கின்றன. இத்துகள்களால், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகளுக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும். இந்தியாவில் முழுமையான இயற்கை விவசாயம் நடைபெற்று வரும் சிக்கிம் மாநிலத்தில், இந்த இரண்டு வகை பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. அங்கு கடைகளில் காகிதப் பைகளில்தான் பொருட்களைக் கொடுக்கிறார்கள். எடை அதிகம் கொண்ட பொருட்கள் என்றால், துணிப் பைகளைப் பயன்படுத்துகிறார்கள். ஆகையால், எங்கள் இயற்கை அங்காடியிலும் காகிதம் மற்றும் துணிப் பைகளையே பயன்படுத்தி வருகிறோம். எண்ணெய் வகைகளுக்கு வாடிக்கையாளர்களையே பாத்திரங்களை எடுத்து வரச் சொல்கிறோம். நீங்களும் இதை முயற்சி செய்து பார்க்கலாம். பிளாஸ்டிக் தீமையை எடுத்துச் சொன்னால், நிச்சயம் வாடிக்கையாளர்கள் பாத்திரங்களுடன் வருவார்கள்.''
தொடர்புக்கு, செல்போன்: 94441-66779.
''நாட்டுக் கோழிகளுக்கு கரையான் நல்ல தீவனம் என்று கேள்விப்பட்டேன். கரையானை உற்பத்தி செய்ய, பானை, சாக்கு... போன்றவற்றைப் போட்டு வைத்தேன். ஆனால், கரையான் உற்பத்தியாகவில்லை. என்ன காரணம்? தவிர, மண்புழுக்களை கோழிகளுக்குக் கொடுக்கலாமா?''
-பி.கே.எம். துரை, கரையான்சாவடி, சென்னை.
கால்நடைப் பராமரிப்புத் துறையின் முன்னாள் மருத்துவ மேற்பார்வையாளர், 'தஞ்சை’ ரா. ரத்தினகிரி பதில் சொல்கிறார்.
''கரையான் அற்புதமான புரதச்சத்து நிறைந்த உணவு. கோழிகளுக்குத் தொடர்ந்து கொடுத்து வந்தால், நல்ல வளர்ச்சி இருக்கும். காய்ந்த சாணம், பழைய சாக்கு, வைக்கோல் போன்றவற்றை நிலத்தில் போட்டு தண்ணீர் தெளித்து, அதன் மீது ஐந்து லிட்டர் கொள்ளளவுள்ள மண்பானையைக் கவிழ்க்கவும். காலையும், மாலையும் பானையை எடுத்து தண்ணீர் தெளிக்கவும். இப்படிச் செய்து வந்தால் 4 முதல் 7 நட்களில், கரையான்கள் வந்துவிடும். பூச்சிக்கொல்லி நனைக்கப்பட்ட சாக்கு, பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட வைக்கோல்... போன்றவற்றைப் பயன்படுத்தினால் கரையான் உற்பத்தி ஆகாது.
மண்புழுக்கள், கோழிகளுக்குச் சிறந்த உணவு. தாராளமாகக் கோழிகளுக்குக் கொடுக்கலாம்.  நெத்திலிக் கருவாட்டுத் தூளையும் தீவனத்தோடு கலந்து கொடுக்க லாம்.  இதைக் கொடுப்பதால், முட்டை உற்பத்தி அதிகரிக்கும். மீன்இறைச்சிக் கழிவுகளையும்கூட கோழிகளுக்குக் கொடுக்கலாம்''
தொடர்புக்கு, செல்போன்: 94424-01336.
- Pasumai vikatan

நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்


நாட்டுக்கோழி வளர்ப்பில் 'நச்'லாபம்
ஜி.பிரபு, படங்கள் : வீ.சிவக்குமார்
பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, சேவக்கட்டு (சேவல் சண்டை) எனப் பாரம்பரிய விளையாட்டுகள் களைகட்டும். சேவல் சண்டை, பொங்கல் சமயம் மட்டுமல்லாமல் கோயில் விழாக்களின்போதும் தொன்றுதொட்டு நடந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் சேவல் சண்டைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தாலும்... பெருமைக்காக அந்தஸ்துக்காக சண்டைச் சேவல்களை வளர்ப்பவர்களும் உண்டு. பக்கத்து மாநிலங்களில் சண்டைச் சேவலுக்குத் தேவை இருப்பதால், சேவல்களைப் பயிற்றுவித்து விற்பனை செய்பவர்களும் உண்டு.
பெரும்பாலும், சேவல் சண்டைக்கு நம்நாட்டு இனமான அசில் வகை சேவல்களைத்தான் தேர்வு செய்வார்கள். இது நன்கு பெருத்து வளரக்கூடியது என்பதுதான் முக்கிய காரணம். அசில் போலவே பெருத்து வளரக்கூடிய இன்னொரு இனம்... 'சிட்டகாங்’ எனும் நாட்டுரகச் சேவல். இந்த இரண்டு இனங்களையும் கலப்புசெய்து, பெருவட்டு இனக் கோழிகளை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறார், திண்டுக்கல் மாவட்டம், காப்பிளியப்பட்டி, பாலமுருகன்.
கட்டுமானத்தொழிலில் இருந்து கால்நடை வளர்ப்புக்கு!
காலை வேளையொன்றில்... கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்த பாலமுருகனைச் சந்தித்தோம்.
''எங்களுக்கு ஊர்ல ரெண்டு ஏக்கர் நிலம் இருக்கு. விவசாயம்தான் குடும்பத்தொழில். டிப்ளமோ சிவில் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, கோயம்புத்தூர்ல பத்து வருஷம் வேலை பாத்தேன். குடும்பத்தை விட்டு பிரிஞ்சே இருந்ததால, குடும்பத்தோட இருக்கணும்னு நினைச்சேன். விவசாயம் பண்ணி பொழைச்சுக்கலாம்னு மூணு வருஷத்துக்கு முன்ன ஊருக்கு வந்துட்டேன். எங்க தோட்டத்துல தண்ணி வசதி இல்லாததால, தென்னம்பட்டியில இருக்கற இந்தத் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்தேன். கோ.எஃப்.எஸ்-29 தீவனச்சோளம், கோ-4 மாதிரியான பசுந்தீவனப் பயிர்களை விதைச்சு... 16 கலப்பின பால் மாடுகளை வாங்கி, பால் உற்பத்தி பண்ண ஆரம்பிச்சேன். ஒரு நாளைக்கு 250 லிட்டர் பால் கிடைச்சுட்டு இருந்தது. ஆனா, கொஞ்ச நாள்லயே கிணத்துல தண்ணி வத்திடுச்சு. அதனால, தீவனம் உற்பத்தி பண்ண முடியாததால... பத்து மாடுகளை வித்துட்டேன். இப்போ ஆறு மாடு மட்டும் கையில இருக்கு. மாடுகளுக்கு போட்ட ஷெட்டுல, கோழிகளை வளர்க்க லாம்னு தோணுச்சு. அதனால ஒன்றரை வருஷமா கோழிகளை வளர்த்திட்டிருக்கேன்'' என்று  முன்னுரை கொடுத்த பாலமுருகன், தொடர்ந்தார்.
  
நாட்டுக்கோழிக்குத் தேவை அதிகம்!
''ஆரம்பத்துல... 'அழகுக்கோழிகளை வளர்க்கலாம்... நாட்டுக்கோழிகளை வளர்க்கலாம்’னு பலரும் ஆலோசனை சொன்னாங்க. நான், நமக்கு பக்கமான ஒட்டன்சத்திரம், அய்யலூர் சந்தைகள்ல எந்தக் கோழிக்கு மார்க்கெட் நல்லாயிருக்குனு பார்த்து, அதைத்தான் வளர்க்கணும்னு முடிவு பண்ணி... சந்தைகளுக்கு அடிக்கடி போயிட்டு வந்தேன். அப்போ, நாட்டுக்கோழிகளுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும், பெருவட்டு சேவல்களையும், கோழிகளையும் எல்லாரும் விரும்பி வாங்கறதைப் பாத்தேன். குறிப்பா, அசில் சேவல்களுக்கு நல்ல கிராக்கி இருந்துச்சு. விலையும் நல்லா கிடைக்கறதைத் தெரிஞ்சுக்கிட்டேன். நாமக்கல் கே.வி.கே-யிலயும் விசாரிச்சுட்டு அசில், சிட்டகாங் வகைக் கோழிகளை வாங்கி வளர்க்க ஆரம்பிச்சேன்.
பெரும்பாலும், அசில் சேவல்களைத்தான் சண்டைக்குப் பயன்படுத்துவாங்க. அதனால, இதுக்கு நல்ல தேவை இருக்கு. நான் ரெண்டு ரகங்களையும் கலந்து கோழிகளை உருவாக்குறப்போ... கோழி, சேவல்கள் நல்ல பெருவெட்டா வருது. இப்போ, கையில அசில், சிட்டகாங் ரெண்டு ரகத்துலயும் சேர்த்து 10 சேவல்கள், 100 கோழிகள்,
100 குஞ்சுகள் வெச்சுருக்கேன். நான் உற்பத்தி பண்ணுன குஞ்சுகளை முதல் தடவை விற்பனை செய்து கிடைச்ச வருமானத்துல... பொள்ளாச்சியில இருந்து நூறு கடக்நாத் வகை கோழிக் குஞ்சுகளை வாங்கிட்டு வந்தேன். அதெல்லாம் இப்போ பருவத்துக்கு வர்ற வயசுல இருக்கு. இது, பழங்குடி மக்கள் வளர்க்கற ரக கோழி. இதோட கறி, கருப்பு நிறத்துலதான் இருக்கும். ரொம்ப மருத்துவ குணம் வாய்ந்த கறி. இந்தக் கோழி நல்ல விலைக்குப் போகும்'' என்ற பாலமுருகன், கடக்நாத் கோழிகளைக் காட்டியபடியே தொடர்ந்தார்.
வளர்ப்புக்கு மட்டும் விற்பனை!
''அசில், சிட்டகாங் கோழிகள் ஒரே மாதிரி இருக்கறதால தானாவே சேர்ந்து இனப்பெருக்கம் செஞ்சுக்கும். ஆனா, கடக்நாத் கோழிகள் அந்த இனத்தோட மட்டும்தான் சேரும். அதனால, இனம் கலக்குறதுக்கு வாய்ப்பில்லை. சராசரியா, இப்போ ஒரு நாளைக்கு பத்து முட்டைகள் கிடைச்சுட்டு இருக்கு. அதை இன்குபேட்டர்ல பொரிக்க வெக்கிறேன். ஊளை முட்டைகள் போக, மாசத்துக்கு சராசரியா 200 குஞ்சுகள் உற்பத்தி ஆகுது. நான் குஞ்சுகளா விக்கிறதில்லை. அம்பது, அம்பத்தஞ்சு நாள் வரைக்கும் வளர்த்துத்தான் விக்கிறேன். அதேமாதிரி, கறிக்காகவும் விக்கிறதில்லை. வளர்ப்புக்காக தாய்க்கோழிகளா மட்டும்தான் விக்கிறேன். சேவக்கட்டுக்காக சேவல்களைத் தனியாவும் வாங்கிக்கிறாங்க'' என்ற பாலமுருகன், பராமரிப்பு முறைகளை விளக்கினார்.
''50 அடி நீளம் 10 அடி அகலத்துல கூரைக் கொட்டகை போட்டிருக்கேன். சுத்தி கம்பி வலை இருக்கு. கோழிகளுக்கு எப்பவும் தண்ணி கிடைக்கற மாதிரி நாசில் பைப் வசதி செஞ்சு வெச்சுருக்கேன். ஷெட்டுக்கு மேல பிளாஸ்டிக் பால் கேனை வெச்சு... அதுல குழாய்களை இணைச்சுருக்கேன். இந்த கேனை தினமும் தண்ணி ஊத்தி நிரப்பி வெச்சுடுவோம். தேவைப்படும்போது கோழிகள் குடிச்சுக்கும். தினமும் காலையில தீவனத்தை தொட்டியில நிரப்பி வெச்சுடுவோம். நாட்டுக்கோழிக்குனு பிரத்யேகமா கம்பெனித் தீவனம் கடைகள்ல கிடைக்குது. அதைத்தான் கோழிகளுக்குக் கொடுக்குறோம். தினமும் சேகரமாகற முட்டைகளை எடுத்து பத்திரப்படுத்திடுவோம்.
ஒவ்வொரு செட்டா இன்குபேட்டர்ல வெச்சு பொரிப்போம். இதுக்காவே தனியா இன்குபேட்டர் ரூம் இருக்கு. இன்குபேட்டர் மூலமா 21 நாள்ல குஞ்சு பொரிஞ்சுடும். அப்பறம் சுத்தப்படுத்திட்டு, அடுத்த செட் முட்டைகளை வெச்சுடுவோம். குஞ்சு பொரிச்சவுடனே ஈரம் காயுற வரைக்கும் இன்கு பேட்டருக்குள்ளேயே வெச்சுடுவோம். அதுக்கப்பறம், அதை புரூடருக்கு மாத்துவோம். தரையில் தவிட்டைப் பரப்பி, அதுக்கு மேல நியூஸ் பேப்பரை விரிச்சு, நாலடி விட்டத்துக்கு வட்டமா அட்டை, பாய் இல்லனா தகரத்தை சுத்தி வெச்சு... இதுல வெப்பத்துக்காக பல்புகளை எரிய விடணும். இதுதான் புரூடர். கூண்டுக்குள்ளகூட இந்த மாதிரி வசதியைப் பண்ணிக்கலாம். இப்போ கரன்ட் அடிக்கடி கட் ஆகறதால, மண் பானைக்குள்ள மூட்டம் போட்டு வெச்சுடுறோம். இது குஞ்சுகளுக்கு கதகதப்பா இருக்கும்.
குஞ்சுகள் பொரிஞ்சு வந்த முதல் நாள், குளுக்கோஸ் தண்ணி மட்டும் கொடுப்போம். ரெண்டாவது, மூணாவது நாள்ல அரைச்ச மக்காச்சோளம் கொடுப்போம். அதுக்கப்பறம், கம்பெனி தீவனம் கொடுக்குறோம். ஒரு மாசம் கழிச்சு குஞ்சுகள கொட்டகைக்கு மாத்திடுவோம். அம்மை, கழிசல் நோய்களுக்கான மருந்துகளை... பிறந்ததுல இருந்து ஏழாம் நாள், பதினஞ்சாம் நாள், இருபத்தோராம் நாள், முப்பத்தஞ்சாம் நாள், அம்பத்தஞ்சாம் நாள்னு முறையா கொடுத்துடுவோம். அதுக்கப்பறம் மாசத்துக்கு ஒரு தடவை மருந்து கொடுப்போம். இதெல்லாம் கட்டாயம் கொடுக்க வேண்டிய மருந்து'' என்று பராமரிப்பு முறைகளை விளக்கிய பாலமுருகன், நிறைவாக வருமானம் பற்றிச் சொன்னார்.
ஒரு ஜோடி 1,500 ரூபாய்!
''நல்லா செழிம்பா தீவனம் கொடுத்து வளர்க்கறதால கோழிகள் மூணு மாசத் துலேயே ரெண்டு கிலோ வரைக்கும் எடை வந்துடும். அம்பது, அம்பத்தஞ்சு நாள் வளர்த்துதான் விற்பனை செய்றேன். வளர்ப்புக்கு மட்டுமே கொடுக்கறதால ஒரு ஜோடி 1,500 ரூபாய்னு விற்பனை செய்றேன். மாசத்துக்கு 50 ஜோடி வரைக்கும் விற்பனை செய்றேன். வீட்டுத்தேவைக்கும், ரொம்ப நெருங்கின நண்பர்களுக்கும்தான் கறிக்காக கோழியை எடுத்துக்குவோம். இதெல்லாம் போக மீதியை பண்ணையிலயே வளர்த்துடுவோம். மூக்கு வளைஞ்சு, கிளி மூக்கு மாதிரி இருக்கற சேவல்களை சண்டைக்குப் பழக்க வாங்குவாங்க. இதுக்குக் கூடுதல் விலை கிடைக்கும். தீவனச் செலவு, பராமரிப்புச் செலவு எல்லாம் போக நாட்டுக்கோழி மூலமா மாசத்துக்கு சராசரியா அம்பதாயிரம் ரூபாய் வரைக்கும் லாபம் கிடைக்குது'' என்று சந்தோஷமாகச் சொன்னார் பாலமுருகன்.
 தொடர்புக்கு,
பாலமுருகன்,
செல்போன்: 95855-24061.
- Pasumai Vikatan