அனைவருக்கும் பசுமை வணக்கம்!
''புதிய ரக பருத்தி, காய்கறி மற்றும் பழங்கள் அதிகம் சாகுபடி செய்யப்படுவதால் எதிர்காலத்தில் களைக்கொல்லிகளுக்கும், பூஞ்சைக் கொல்லிகளுக்கும் தேவைப்பாடு அதிகமாக இருக்கும். இதனால் பூச்சிமருந்து தயாரிப்புத் துறை வளர்ச்சி அடையும்...''
-இப்படி ஒரு நம்பிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது வணிக மற்றும் தொழில் நிறுவனங்களின் அமைப்பான 'அசோசெம்' (ASSOCHAM-Associated Chambers of Commerce and Industry of India)!
இந்த 'நம்பிக்கை’ அறிவிப்பை வெளியிட்டதற்கு பின்னால், பேருண்மை ஒன்று மறைந்துள்ளது. 'யெஸ் பேங்க்' என்ற வெளிநாட்டு வங்கியும், 'அசோசெம்' அமைப்பும் நாடு முழுக்க சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தின. இதன் மூலமாக, 'சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி விஷங்களைவிட, இந்தியாவில் இரண்டு சதவிகிதம் குறைவாகப் பயன்படுத்தப்படுகிறது' என்கிற உண்மையைக் கண்டறிந்துள்ளார்கள்.
இப்படி பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறைய ஆரம்பித்திருப்பதன் காரணமே.... இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்பு உணர்வு இங்கே பெருக ஆரம்பித்திருப்பதுதான். ஆனால், 'இந்த இரண்டு சதவிகித விழிப்பு உணர்வு... நாளைக்கு நான்காகும்... எட்டாகும்.... பதினாறாகும்...
இப்படியே போனால், கம்பெனிகள் தயாரிக்கும் பூச்சிக்கொல்லிகளை யாரிடம் போய் விற்பனை செய்வது?' என்கிற பதைபதைப்பு வணிக நிறுவனங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது 'அசோசெம்' அறிக்கை!
உலகம் முழுக்கவே, 'பூச்சிக்கொல்லி விஷத்தை விவசாயத்தில் பயன்படுத்துவதைக் குறையுங்கள்' என்கிற பிரசாரம் தீவிரமாக நடந்துவருகிறது. காரணம்... அவற்றின் தாறுமாறான பயன்பாட்டின் எதிர்விளைவாக, மக்களுக்கும் சூழலுக்கும் ஏற்பட்டிருக்கும் கேடுகள்தான்!
'நன்மை மற்றும் தீமை செய்யும் பூச்சிகளின் நடமாட்டம் எவ்வளவு உள்ளது. பொருளாதாரச் சேத நிலை எப்படி இருக்கிறது... என்பதையெல்லாம் பார்த்த பிறகே, பூச்சிக்கொல்லி தெளிக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய வேண்டும்’ என்று வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளேகூட சொல்லி வருகிறார்கள். என்றாலும், தும்பி, சிலந்தி, தேனீ... என நன்மை செய்யும் பூச்சிகளைக் கண்டால்கூட பதறியடித்து, பூச்சிக்கொல்லி தெளிக்கும் நிலைதான் இங்கே நீடிக்கிறது.
இந்த நிலையில், இரண்டு சதவிகித பூச்சிக்கொல்லிப் பயன்பாடு குறைந்ததற்கே, பதைபதைப்போரை என்னவென்று சொல்வது?!
- Vikatan
No comments:
Post a Comment